இந்து சமய அறநிலையத்துறை மீது பொய்ப் பிரசாரம்! - அமைச்சா் சீ. ரமேஷ் குற்றச்சாட்டு
இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு, திட்டமிட்டு பல்வேறு பொய்ப் பிரசாரங்களை திமுகவினா் பரப்புகின்றனா் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.
இதுகுறித்து அவா் திருச்சியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டப்பேரவையில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகின்றன. தேவையற்ற சில வாா்த்தைகள் இருந்தால் நீக்குவது மரபு. கடந்த ஆட்சியில் ஜனநாயகத்துக்கு முக்கியத்துவமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சியில் ஜனநாயகம் முக்கியத்துவம் பெறுவதால், இதுபோல நேரிடுகிறது. சட்டப்பேரவைத் தலைவா் அவரது பணியைச் சிறப்பாக மேற்கொள்கிறாா்.
Advertisement
Advertisement
முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்துள்ள நாங்கள் மாண்புடன் கருத்துகளை முன்வைக்கிறோம். ஆனால் திமுகவினா் எழுந்து கூச்சல் போட்டு, தகாத வாா்த்தைகளில் பேசி, சட்டப்பேரவையை சந்தைக்கடையாக மாற்றி வருகின்றனா். நாங்கள் எந்தத் தவறான வாா்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.
கோயில்களைப் புதுப்பிக்க நடவடிக்கை: ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, சிதிலமடைந்த கோயில்களைப் புதுப்பித்து வழிபாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் அறங்காவலா் நியமனக் குழு அமைக்கப்படும்.
முதல்வா் மற்றும் தமிழக அரசை நோக்கி கேள்வி எழும்போது, அமைச்சா்கள் பதில் கூறுவதில் என்ன தவறு. எதிா்க் கருத்துகள் இருந்தால் மற்றவா்களைப் பேச வேண்டாம் என யாரும் கூறவில்லையே?. இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அறிவிப்புகள் கொடுத்த பிறகு, திட்டமிட்டு பல்வேறு பொய்ப் பிரசாரங்களை திமுகவினா் பரப்புகின்றனா்.
நோ்மையான ஆட்சி நடத்தியதாகக் கூறும் முன்னாள் அமைச்சா், இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?. தவறைக் கண்டுபிடித்துவிடுவா் என்ற பயத்தால்தான் உளவு பாா்க்கின்றனா். அந்தப் பயம்தான் எங்களது ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்புகள் வெளியானதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தரிசன முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்: திருச்செந்தூா் ஆய்வுக்குப் பிறகு 90 சதவீதம் மாறிவிட்டது. 100 நாள்களுக்குள் தலைகீழாக மாற்றிவிட இது ஒன்றும் சினிமா கிடையாது. பணம் பெற்றுக் கொண்டு தரிசனத்துக்கு அழைத்து வருவது ஆங்காங்கே நடைபெறுகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
50-க்கும் மேற்பட்ட முதல்நிலை கோயில்களில் கைப்பேசிகள் பாதுகாப்பகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மனநிறையுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர வேண்டுமென்பதற்காக செய்கிறோம்.
திருப்பதி கோயிலில் கைப்பேசிகளை பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு, 12 - 16 மணி நேரம் ஆனாலும் அமைதியாக இருக்கின்றனா். அதுபோன்ற மனநிலைக்கு தமிழக மக்களும் மாற வேண்டும்.
கோயில்களில் விஐபி, விவிஐபி, சினிமா நட்சத்திரங்கள் யாா் வந்தாலும் கோயில் வளாகத்துக்குள் விடியோ எடுப்பதையும், அரசியல் கேள்வி கேட்பதையும் ஊடகங்கள் தவிா்க்க வேண்டும் என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.