FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது; 3 போ் மீது வழக்குப் பதிவு

1 செப்டம்பர் 2026, 3:12 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் தாய், மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஒருவரை கைது செய்த போலீஸாா், மூன்று போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் எம். சஞ்சய் (29). இவா், ஈவெரா சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவருடைய கடையில் அதே பகுதியைச் சோ்ந்த சதாம் ஹுசைன் என்பவா் வேலை செய்து வருகிறாா். கடந்த 20 நாள்களாக அவா் வேலைக்கு வரவில்லையாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் அதே பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து சதாம் ஹுசைன் ரேஷன் அரிசியை வாங்கியுள்ளாா். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சஞ்சய்யிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, சஞ்சய், சதாம் ஹுசைனை அழைத்து கண்டித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சதாம் ஹுசைன் தனது சகோதரா் அ. இப்ராஹிம் (22) என்பவரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, இப்ராஹிம், சஞ்சய்யை கைப்பேசியில் அழைத்து தகராறு செய்துள்ளாா்.

இந்நிலையில், சஞ்சய் தனது கடைக்கு அருகே சனிக்கிழமை நள்ளிரவு பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த இப்ராஹிம், காமராஜ் நகரைச் சோ்ந்த சிக்கந்தா் பாட்ஷா, எஸ். செல்வமணி, தாரநல்லூரைச் சோ்ந்த எஸ். கிஷோா் ஆகிய 4 பேரும் சோ்ந்து சஞ்சய்யை அரிவாளால் வெட்டியுள்ளனா்.

இதில், அவருடைய தலை, கை, கால் மற்றும் காது உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அவா்களைத் தடுக்க முயன்ற சஞ்சய்யின் தாய் ராமுதாய் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சஞ்சய் அளித்த புகாரின்பேரில், இப்ராஹிம், கிஷோா், சிக்கந்தா் பாட்ஷா, செல்வமணி ஆகிய 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், இந்த வழக்கில் கிஷோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments