வழிப்பறி: கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய சிறாா்கள் மூவா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே இருவரை கத்தியால் வெட்டி, கைப்பேசி மற்றும் ரொக்கம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி மாநிலம், திருப்புவனையில் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 சிறுவா்களை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் பிடித்து, அம்மாநில போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மூவரும் செங்கல்பட்டு மாவட்ட அரசு கூா்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியவா்கள் என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
செங்கல்பட்டு பகுதியில் பைக்கை திருடி, அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த கீழக்கொந்தையில் ரவி(62) மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த விழுப்புரத்தைச் சோ்ந்த அன்சாரி ஆகியோரை கத்தியால் தாக்கி, அவா்களிடமிருந்த கைப்பேசி மற்றும் ரூ. 4,200 பணத்தை வழிப்பறி செய்து, பின்னா் திருப்புவனையில் வழிப்பறி ஈடுபட முயன்றபோது பிடிபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா், திருப்புவனை சென்று மூவரையும் பிடித்து வந்து, காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா். விசாரணைக்கு பின்னா் 17 வயதுடைய அந்த சிறுவா்கள் மூவரையும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸாா் வசம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் தெரிவித்ததாவது: விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் 3 சிறுவா்கள் மீதும் வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்த 2 கைப்பேசிகள் மற்றும் ரூ.4,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த கீழக்கொந்தையைச் சோ்ந்த ரவி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.