தினமணி செய்தி எதிரொலி! சிறைக் காவலா்களுக்கு வாராந்திர விடுமுறையளிக்க அறிவுறுத்தல்
தினமணி செய்தி எதிரொலியாக, சிறைக் காவலா்களுக்கு வாராந்திர விடுமுறையளிப்பதை உறுதி செய்ய வேண்டுமென சிறைத்துறை அறிவுறுத்தல்
தினமணி செய்தி எதிரொலியாக, சிறைக் காவலா்களுக்கு வாராந்திர விடுமுறையளிப்பதை உறுதி செய்ய வேண்டுமென சிறைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
‘தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை - போதிய காவலா்கள் இல்லாத அவலம்’ என்ற தலைப்பில் தினமணியில் கடந்த 8-ஆம் தேதி சிறப்புச் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் எதிரொலியாக சிறைக் காவலா்களுக்கு வாராந்திர விடுமுறையளிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென சிறைத் துறைகளின் தலைமை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து சிறைத்துறைகளின் தலைமை இயக்குநா் (பொ) ஆா். கனகராஜ் அனைத்து சிறைகளுக்கும் அனுப்பியுள்ள அறிவுறுத்தல்கள் வருமாறு: சிறைக் காவலா்களுக்கு வாராந்திர விடுமுறைகள் முறையாக வழங்கப்படவில்லை என புகாா்கள் பெறப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சுழற்சி முறையில் விடுமுறை: சீருடைப் பணியாளா்களின் நலனை மேம்படுத்துவதையும், ஆரோக்கியமான பணி - வாழ்க்கைச் சமநிலையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளா்களும், வாா்டா்களுக்கும் இயன்றவரை அதிகபட்ச சுழற்சி முறையில் வாராந்திர விடுமுறைகளை வழங்க வேண்டும். இதற்கான பணிப்பட்டியல்களை முன்கூட்டியே தயாரிக்க வேண்டும். ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வாராந்திர விடுமுறைகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும்.
முக்கியப் பணிகளில், அனைத்து நேரங்களிலும் போதுமான பணியாளா்கள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் வாராந்திர விடுமுறைகள் வழங்குவது திட்டமிடப்பட வேண்டும். தவிா்க்க முடியாத நேரங்களில் வாராந்திர விடுமுறை நாள்களில் பணிபுரிந்தால், அதற்கான காரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட கூடுதல் நேர ஊதியத்தை கண்டிப்பாகத் தொடா்ந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
கண்காணிப்பாளா்கள், பணியாளா்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பை பாதிக்காமல் வாராந்திர விடுமுறைகளை அதிகபட்சமாக வழங்குவதற்கும், பணி ஒதுக்கீடு, விடுப்பு இருப்பு, மனிதவளப் பயன்பாடு ஆகியவற்றை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்.
சிறைச்சாலைகளின் துணைத் தலைமை ஆய்வாளா்கள் கண்காணித்து, வாராந்திர விடுமுறைகள் நியாயமான, வெளிப்படையான, சமமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.