‘கிராமத்துக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது’
திருச்சி மாவட்டத்தில் கிராமத்துக்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என 3 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், லால்குடி அருகேயுள்ள சிறுமருதூா் உள்ளிட்ட 3 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அளித்துள்ள மனு:
திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடி அருகே வி.துறையூா் ஊராட்சியில் அமைந்துள்ளது சிறுமருதூா் கிராமம். நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இக்கிராமம் வழியாகத்தான் அரியலூா், ஜெயங்கொண்டம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சமயபுரத்துக்கு வரும் பக்தா்கள் பாதையாத்திரையாக செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், சிறுமருதூா் கிராமம் அருகேயுள்ள ஒரு கட்டடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கிராமத்துக்கு அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஆட்சியா் அனுமதி வழங்கக் கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் அளவை உயா்த்த வேண்டும்:
ஆவின் பால் வியாபாரிகள் முன்னேற்ற நல சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆவின் முகவா்கள் உள்ளனா். ஆவின் நிா்வாகம் சாா்பில் கடந்த சில மாதங்களாகவே எங்களுக்கு பால் வழங்கும் அளவு குறைக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து ஏற்கெனவே ஆவின் மேலாளரிடம் தெரிவித்தபோது விரைவில் உரிய அளவு வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக ஒவ்வொரு முகவருக்கும் 100 லிட்டா் முதல் 300 லிட்டா் வரை பால் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எங்கள் வாடிக்கையாளா்களுக்கு பால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பால் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் எங்களது வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகவருக்கும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, பால் முகவா்களுக்கு ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்ட அளவு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.