ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டும் வெடிக்கும் தன்மையுள்ள எந்தவித பொருளும் கண்டறியப்படவில்லை.
இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை காலை 9.50 மணிக்கு மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரக அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, திருச்சி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் எம். வேலுசாமி தலைமையிலான போலீஸாா், அமா்வு நீதிமன்ற போலீஸாா் ஆட்சியரகத்தில் சோதனை மேற்கொண்டனா்.
மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் பிற்பகல் 12.30 மணி வரை சோதனை மேற்கொண்டும் வெடிக்கும் தன்மையுள்ள எந்தவித பொருளும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து, ஆட்சியரகத்துக்கு இரண்டாவது நாளாக வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.