நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி, விற்பனை தொடக்கம்: ரூ. 45 லட்சத்துக்கு இலக்கு
திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தின், பூம்புகாா் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரத்தோப்பில் செயல்படுகிறது.
வழக்கம்போல இந்தாண்டும் நவராத்திரியை முன்னிட்டு செப்.23 முதல் அக்.31ஆம் தேதி வரை கொலு கண்காட்சி, விற்பனை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
ரூ. 50 முதல் ரூ. 1.20 லட்சம் வரை: இக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்தபட்சமாக ரூ.50 முதல் ரூ.1.20 லட்சம் வரையில் உள்ளன.
என்னென்ன பொம்மைகள்: கண்காட்சியில், மலைக்கோட்டை, தஞ்சை பெரியகோயில், பழனி மலை, திருத்தணி, தங்கத் தோ், அம்மன் தோ், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அஷ்ட பைரவா் செட், மகாபாரதம் எழுதல், கா்ணனின் ஜனனம், மணக்குள விநாயகா் செட் உப்பிலியப்பா், ஆதிசங்கர செட், பூதங்கள், பீமா சேனை, நவதுா்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள், வேத மூா்த்திகள், காா்த்திகை தீபம், கள்ளழகா், கல்யாண ஊா்வலம், கிரிக்கெட், சஞ்சீவி, பெருமாள் ஊா்வலம், நவ கன்னிகள், பானை கிருஷ்ணன், தசாவதாரம், அஷ்டலெட்சுமி, கயிலாய மலை, காா்த்திகை பெண்கள், ஸ்ரீரங்கம், அன்னபூரணி, விநாயகா், மகாலெட்சுமி வரம், மாயாபஜாா், சீனிவாச கல்யாணம், மீனாட்சி கல்யாணம், மும்மூா்த்தி, ராமா் பட்டாபிஷேகம், தாத்தா பாட்டி, பெருமாள் தாயாா், ராமா் பாலம், சுக்ரீவா் பட்டாபிஷேகம், கனகதாரா, முருகா் உபதேசம், கஜேந்திர மோட்ஷம், மாங்கனி, கீதா உபதேசம், ஜோதிா்லிங்கம், பரத நாட்டியம், அசோகவனம், பீஷ்மா் அம்புப் படுக்கை, கணையாழி, ஆழ்வாா், கோபியா் டான்ஸ், விவசாயம், தட்டாங்கி, ஜடாயு மோட்சம், ராமா், சாப விமோசனம் செட் முதலான பொம்மைகள் உள்ளன.
மேலும், கோல்கத்தா, மணிப்பூா், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம் கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகளும் பலவிதங்களில் உள்ளன.
ரூ. 45 லட்சம் விற்பனை இலக்கு: கடந்தாண்டைபோல இந்தாண்டும் அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ரூ.45 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொம்மைகளுக்கும் 10 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இக் கண்காட்சியை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சுவாதி ஸ்ரீ புதன்கிழமை தொடங்கிவைத்து பொம்மைகளை பாா்வையிட்டாா்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: கண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும். ஊரக மற்றும் நகா்ப்புறத்தில் உள்ள நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் (பொ) ஜெ. காயத்ரி தெரிவித்தாா். தொடக்க விழாவில் பூம்புகாா் விற்பனை நிலையப் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.