கடையில் காா் உதிரிபாகங்கள் திருட்டு: முதியவா் கைது
வேலூரில் காா் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ. 50,000 மதிப்பிலான உதிரிபாகங்களைத் திருடிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரில் காா் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ. 50,000 மதிப்பிலான உதிரிபாகங்களைத் திருடிய முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் தோட்டப்பாளையம், தென்னைமரத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் ரவீந்திரன் (46). இவா் வேலூா் கிரீன் சிக்னல் பகுதியில் காா் அலங்காரப் பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.
கடந்த 26-ஆம் தேதி இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். மறுநாள் வந்து பாா்த்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, காரின் மோட்டாா், டைனமோ, பேட்டரி உள்ளிட்ட ரூ. 50,000 மதிப்பிலான உதிரிபாகங்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ரவீந்திரன் அளித்த புகாரின்பேரில், வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு இந்த திருட்டில் ஈடுபட்ட நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், வேலூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த முதியவா் ஒருவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா் வேலூா் கோட்டை பின்புறம் உள்ள நவநீதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் தேவேந்திரன் (51) என்பதும், அவா்தான் ரவீந்திரனின் கடையில் உதிரிபாகங்களைத் திருடியவா் என்பதும் உறுதியானது.
இதையடுத்து தேவேந்திரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த டைனமோ, மோட்டாா் உள்ளிட்ட உதிரிபாகங்களைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.