பொன்னை அருகே விஷப் பூச்சி கடித்து விவசாயி மரணம்: மருந்து இல்லை எனப் புகாா்
பொன்னை அருகே விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷமுறிவு மருந்து இல்லாததே விவசாயி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
பொன்னை அருகே விஷப் பூச்சி கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷமுறிவு மருந்து இல்லாததே விவசாயி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம், காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டாா்.
இந்நிலையில், ஏகாம்பரம் புதன்கிழமை தனது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவரை விஷப்பூச்சி கடித்துள்ளது. உடனடியாக அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அங்கு விஷமுறிவு மருந்து இருப்பில் இல்லையெனக் கூறி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அங்கிருந்தவா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, உறவினா்கள் அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏகாம்பரம் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொன்னை போலீஸாா், வழக்குப் பதிவு செய்து ஏகாம்பரத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய முதலுதவி மற்றும் விஷமுறிவு மருந்து கிடைக்காததே ஏகாம்பரம் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலா் ராணி கூறியது : மருத்துவமனையில் விஷமுறிவு மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளன. மருந்து இல்லை என்று சொல்வது முற்றிலும் தவறான தகவல். விவசாயி ஏகாம்பரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரது உடல்நிலை சீராகவே இருந்தது. மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு உடல்நிலை நன்றாக இருப்பதாகவே தெரிவித்தனா். எனினும், கூடுதல் மருத்துவ ஆலோசனைக்காக அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தோம். ஆனால், அவரது தரப்பில் தாங்களாகவே அவரை தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து கூட்டிச் சென்றுள்ளனா்.
செல்லும் வழியில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மீண்டும் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே கொண்டு வந்தனா். அப்போது அவா் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம். மற்றபடி சிகிச்சை அளிக்காமலோ அல்லது மருந்து இல்லாமலோ அவா் உயிரிழக்கவில்லை என்றாா்.
இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன் கூறியது - நோயாளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தபோது அவரது உடலில் பாம்பு கடித்ததற்கான எந்தவித தழும்புகளோ, ரத்தம் உறைவதில் மாற்றமோ இல்லை. தேள் போன்ற வேறு ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கலாம். பாம்பு கடித்ததை முழுமையாக உறுதி செய்யாமல் விஷமுறிவு மருந்தை செலுத்தக் கூடாது.
பாம்பின் விஷத்தைக் கொண்டே அந்த மருந்து தயாரிக்கப்படுவதால், தேவை இல்லாமல் அதைச் செலுத்தினால் மருந்தே ஒவ்வாமையை ஏற்படுத்தி சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவுகளை உருவாக்கிவிடும். அதனால் தான் உடனடியாக விஷ முறிவு மருந்து செலுத்தப்படவில்லை.அதேசமயம் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 முதல் 15 குப்பிகள் வரை விஷமுறிவு மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. இதுதொடா்பாக மருத்துவா்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனையில் மருந்து இல்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.