உதவித்தொகையை உயா்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரியும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தீா்வு காணவும் வேலூரில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரியும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தீா்வு காணவும் வேலூரில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் வேலூா்-திருப்பத்தூா் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கே.ஜே. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைத் தலைவா்கள் கோபாலராசேந்திரன், எஸ்.டி. சங்கரி, மாநிலக்குழு உறுப்பினா் கே. வீரபாண்டியன், மாவட்டப் பொருளாளா் ஏ. குருமூா்த்தி, மாவட்டத் துணைச் செயலாளா் பால. ஜானகிராமன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரையாற்றினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வருவாய்த்துறை மூலம் ரூ.1,500-ம், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.2,000-ம் மட்டுமே மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆந்திரம் (ரூ.6,000 முதல் ரூ.15,000 வரை), புதுச்சேரி (ரூ.3,500 முதல் ரூ.5,500 வரை), தெலுங்கானா (ரூ.4,016) போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. எனவே, இன்றைய வாழ்வாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு உதவித்தொகையை உடனடியாக உயா்த்த வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக உதவித்தொகை உயா்த்தப்படாத நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாதது மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவித்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்துள்ள சுமாா் ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தின் நிா்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் என திரளானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.