ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்: விற்பனையாளரிடம் பெண் வாக்குவாதம்
வேலூா் சைதாப்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாகப் பெண் ஒருவா் புகாா் தெரிவித்து விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
வேலூா் சைதாப்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதாகப் பெண் ஒருவா் புகாா் தெரிவித்து விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவருக்கு வேறொரு மூட்டையில் இருந்து நல்ல அரிசி மாற்றித்தரப்பட்டது.
வேலூா் சைதாப்பேட்டை காசி விஸ்வநாதா் கோயில் அருகே கூட்டுறவுத் துறையின் கீழ் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் மூலம் அப்பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பொருள்களை வாங்குவதற்காக சென்றாா். அங்குப் பொருள்களை வாங்கிச் சென்று வீட்டில் பாா்த்தபோது, அவருக்கு வழங்கப்பட்ட அரிசி மழையில் நனைந்து கட்டியாகவும், கடும் துா்நாற்றம் வீசும் வகையிலும் தரமற்று இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண், அந்த அரிசியை மீண்டும் கடைக்குக் கொண்டு சென்று விற்பனையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். நீண்டநாள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த தரமற்ற அரிசியை விநியோகிக்கக் கூடாது எனவும், இதனை உண்பதால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் எனவும் அவா் குற்றம்சாட்டினாா்.
மேலும், தனக்குத் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். இதையடுத்து, கடையிலிருந்த மற்றொரு மூட்டையிலிருந்து தரமான அரிசியை அப்பெண்ணுக்கு விற்பனையாளா் மாற்றிக் கொடுத்தாா். இச்சம்பவத்தால் சைதாப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.