வேலூா் மேம்பாலத்தில் காா் மோதி 4 இருசக்கர வாகனங்கள், ஆட்டோ சேதம்: குழந்தை உயிரிழப்பு; 10 போ் காயம்
வேலூா் அடுத்த வள்ளலாா் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த காா், முன்னால் சென்ற 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் ஒரு குழந்தை உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா்.

வேலூா் அடுத்த வள்ளலாா் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த காா், முன்னால் சென்ற 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் ஒரு குழந்தை உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா்.
பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலாா் மேம்பாலம் வழியாக வெள்ளிக்கிழமை காா் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தக் காா், முன்னால் சென்று கொண்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த வேலூா் சத்துவாச்சாரி வஉசி நகரைச் சோ்ந்த முகமது (23), அவரது மனைவி நூருமா (21) மற்றும் அவா்களின் 2 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனா். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தாா். நூருமாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சாலையின் இடதுபுறம் விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை இம்ரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மூன்று வயது குழந்தை சாலையின் வலதுபுறமும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தது.
Advertisement
Advertisement
இதேபோல், மற்ற இருசக்கர வாகனங்களில் சென்ற ஆண்கள், பெண்கள் என மேலும் 6 போ் பலத்த காயமடைந்தனா். விபத்தில் சிக்கிய ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாா், பலத்த காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பலத்த காயமடைந்த 3 வயது குழந்தை ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
விபத்தால் வள்ளலாா் மேம்பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைப் போலீஸாா் சீா் செய்தனா். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை பேராசிரியா் அருண்குமாா் ஓட்டி வந்தது தெரியவந்தது. காா் ஓட்டிச் சென்றபோது, பிரேக் பெடலின் அடியில் கால்மிதி சிக்கிக்கொண்டதால் பிரேக் பிடிக்க முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.