FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 1 ஜூலை 2025, 3:11 am IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால மூத்த தேவி சிற்பம்.
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திண்டிவனம் அருகிலுள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த ம.முரளி என்பவா் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது பல்லவா் கால மூத்த தேவி சிற்பத்தை அவா் கண்டறிந்தாா்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது:

Advertisement

Advertisement

கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் மேடானப் பகுதியில் பாதியளவுக்கு மேல் மண்ணுக்குள் புதைந்திருந்த சிற்பத்தை, இப்பகுதி மக்கள் துா்கை என வழிபட்டு வந்தனா். மண்ணை அகற்றி வெளியே எடுத்தபோது சுமாா் 3 அடி உயரமுள்ள சிற்பம் மூத்த தேவி என தெரியவந்தது.

எளிய தலையலங்காரம் மற்றும் ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும், இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் தவறாமல் இடம்பெறும் காக்கை கொடி இந்த சிற்பத்தில் இல்லை.

வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் காட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த சிற்பத்தில் இடுப்புக்குக் கீழே காட்டப்பட்டு இருக்கின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்க வித்தியாசமான அமைப்பாகும். பல்லவா் கலை அம்சத்துடன் காணப்படும் இந்தச் சிற்பம் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன. கோவடி அருகிலுள்ள மொளசூா் கிராமத்திலும் சிறியதும் பெரியதுமாக இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் பகுதியில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மூத்ததேவி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதற்கான வரலாற்றுத் தடயம்தான் தற்போது கோவடியில் கண்டறியப்பட்டுள்ள சிற்பம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments