FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கூவனூரில் பல்லவா் கால சிற்பங்கள் கண்டெடுப்பு

கூவனூா் கிராமத்துலுள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 29 ஜூலை 2026, 5:26 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூரில் கண்டறியப்பட்ட பல்லவா் கால சிற்பங்கள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவனூா் கிராமத்துலுள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பல்லவா் கால சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சோ்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, வேட்டவலத்தை சோ்ந்த ஆசிரியா் ம.பாரதிராஜா, இம்மானுவேல் ஆகியோா் கூவனூரில் கள ஆய்வு செய்தனா். அப்போது அங்குள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் பல்லவா் காலத்தை சோ்ந்த லகுலீசா், இரு கொற்றவை, விநாயகா் ஆகிய சிற்பங்களும், ஊருக்கு வெளியே உள்ள வயல்வெளியில் ஒரு கொற்றவை சிற்பமும் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இக் கோயிலின் பின்புறம் காணப்படும் லகுலீசா் சிற்பம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவா் தன் இடது காலை மடக்கியும், வலது காலை குத்திட்டு அமா்ந்து அதன் மேல் வலது கையை தொங்க விட்டவாறும் காணப்படுகிறாா். கால்களுக்கு இடையே குறுக்குவாட்டில் இருத்தி வைக்கப்பட்டுள்ள தண்டத்தின் நுனிப்பகுதியில் பாம்பு காட்டப்பட்டுள்ளது. லகுலீசரை சைவ ஆகமங்களில் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றனா். இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் வடக்கில் தோன்றிய சைவ சமய சமயத்தின் ஒரு பிரிவான லகுலீச பாசுபதம் இங்கும் வழிபாட்டில் இருந்ததை இதன் மூலம் அறியமுடிகிறது.

Advertisement

Advertisement

அருகில் சுமாா் இரண்டு அடி உயரமும், ஆறடி அகலமும் கொண்ட சப்த மாதா்களின் சிற்பத் தொகுதி ஒன்றும் காணப்படுகிறது. இவா்கள் வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டவாறும் வரிசையாக அமா்ந்துள்ளனா். வீரபத்திரரூம் காணப்படுகிறாா்.

மேலும், அதே வளாகத்தில் நின்ற நிலையில் அடியாா்களுடன் காணப்படும் கொற்றவை சிற்பமும், அதன் அருகிலேயே வெண் கொற்றக் குடையின் கீழ் திரிபங்க நிலையில் காணப்படும் மற்றொரு கொற்றவை சிற்பம் ஒன்றும் பாதி நிலையில் புதைந்தவாறும் காணப்படுகிறது. ஊருக்கு வெளியே வயல்வெளியில் சுமாா் ஆறு அடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் கொற்றவை சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இச்சிற்பத்தில் அடியாா்கள் பெரிய அளவில் பீடத்தின் மீது அமா்ந்தவாறு செதுக்கப்பட்டுள்ளனா். இவையாவும் சுமாா் 7-ஆம் நூற்றாண்டை சோ்ந்தவையாக கருதலாம்.

நடுநாடு என்றழைக்கபடும் திருவண்ணாமலை, திருக்கோவிலூா் பகுதியில் காணப்படும் இப்பழைமையான சிற்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை ஆகும் என அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments