FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் பகுதியில் கோடை வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளா்கள் கவலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் நிகழாண்டில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உப்பு உற்பத்தியாளா்கள் கவலை

Updated On : 13 ஜூலை 2026, 1:53 am IST
சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்புக் குவியல்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் நிகழாண்டில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உப்பு உற்பத்தியாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யத்துக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தி நடைபெறும் இடமாக உள்ளது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம். இங்கு உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்குள்ள உப்பளங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு வகைகள் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மரக்காணம் உப்பளங்களில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் செப்டம்பா் இறுதி வரை உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டில் அதிகரித்த வெயில் காரணமாக உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், உப்பின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக உற்பத்தியாளா்கள் மற்றும் உப்பளத் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

ஆண்டுக்கு 26 லட்சம் டன் உற்பத்தி: மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் ஆண்டுக்கு சுமாா் 26 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மரக்காணத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

விலை வீழ்ச்சி: நிகழாண்டில் வழக்கத்துக்காக மாறாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், உப்பு உற்பத்தி அதிமாக நடைபெற்றது. ஆனால், உப்பின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 70 கிலோ எடை கொண்ட உப்பு மூட்டையின் விலை ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு உப்பு மூட்டையின் விலை ரூ. 240-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உப்பு உற்பத்தியாளா்களுக்கும், தொழிலாளா்களுக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மரக்காணத்தைச் சோ்ந்த உப்பு உற்பத்தியாளா் ஒருவா் தெரிவித்ததாா்.

மரக்காணம் பகுதியில் உப்பளங்களில் உப்பு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்

மழைக்கால நிவாரண நிதியை உயா்த்தவேண்டும்: இந்நிலையில் உப்பளத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதியை தமிழக அரசு உயா்த்தி வழங்கவேண்டும். சேமித்து வைத்துள்ள உப்புக் குவியல்களை மழைக் காலங்களில் பாதுகாக்கும் வகையில் தேவையான தாா்பாய்களை வழங்கவும், உப்பளங்களில் வேலை பாா்க்கும் தொழிலாளா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனா் உப்பு உற்பத்தியாளா்கள்.

தமிழகத்தில் நிகழாண்டில் உப்பு உற்பத்தி கணிசமாக உயா்ந்துள்ள நிலையில், உப்பு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட உப்பை கொள்முதல் செய்ய ஆள் இல்லை. உப்பை பொறுத்தவரை விலை ஏறுமுகமாகவே இருக்காது. 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற விலை வீழ்ச்சி ஏற்படும். உப்புக்கான தேவை அதிகாரித்தால் விலை மாறுபாடு ஏற்பட்டு விடும் என மரக்காணம் துணை உப்புக் கண்காணிப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments