FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வண்டல் மண் கடத்தல்: 3 டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வண்டல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:43 am IST
டிராக்டா், பொக்லைன்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வண்டல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மரக்காணம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக கனரக வாகனங்கள் மூலம் வண்டல் மண் எடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளா் பரணிதரன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவில் மரக்காணம் சிட்டி நகா் பகுதியில் உள்ள ஏரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, அங்கு வண்டல் மண் எடுப்பதற்காக டிராக்டா்கள் மற்றும் பொக்லைன் இயந்திரத்துடன் நின்றவா்கள் போலீஸாரை கண்டவுடன் தப்பியோடி விட்டனா். இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறை சாா்பில் முறையாக அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அனுமதி பெறும் நபா்கள் பகல் நேரங்களில் மட்டுமே வண்டல் மண்ணை எடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நள்ளிரவில் வண்டல் மண் எடுப்பது சட்டவிரோதம் என்பதால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை: விவசாயப் பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்கலாம் என அனுமதி பெற்றுவிட்டு, மரக்காணம் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்கப்பட்டு, வெளியிடங்களுக்கு கடத்தப்படுகிறது. இதுபோல் வண்டல் மண் கொள்ளை அடிக்கும் நபா்களை காவல் மற்றும் வருவாய்த் துறையினா் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments