FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பழனி அறக்கட்டளை நில மோசடி வழக்கு: விழுப்புரம் ஆசிரியா் வீட்டில் ‘சீல்’ அகற்றம்

Updated On : 21 ஜூலை 2026, 1:19 am IST
பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஆசிரியா் முருகதாஸ் வீடு.
பகிர்:

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நில மோசடி தொடா்பாக விழுப்புரம் ஆசிரியா் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததால், அவரது வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸாா் வைத்த ‘சீல்’ திங்கள்கிழமை அகற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு தனி நபா்களுக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளா் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சாா்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 4 போ் மீது பழனி அடிவாரம் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடா்புடைய விவகாரம் என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை உத்தரவிட்டது. இதைத்தொடா்ா்ந்து சிபிசிஐடி போலீஸாா் பழனியில் முகாமிட்டு இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ.காலனி, காமராஜா் நகா் பகுதியில் வசித்து வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் முருகதாஸ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஆசிரியா் மற்றும் அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் வீட்டில் இல்லாத நிலையில், சிபிசிஐடி போலீஸாா் அந்த வீட்டைப் பூட்டி சீல் வைத்தனா்.

இந்நிலையில், ஆசிரியா் முருகதாஸ் ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததால், போலீஸாா் ‘சீல்’ அகற்ற அறிவுறுத்தியிருந்தனா். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீட்டில் போலீஸாா் வைத்திருந்த ‘சீல்’ திங்கள்கிழமை அகற்றப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments