திருமாவளவன் திறக்கவிருந்த அம்பேத்கா் சிலை அகற்றம்! அனுமதி பெறாததால் அதிகாரிகள் நடவடிக்கை!
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் சிலையை வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை அதிகாலை அகற்றி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் சிலையை வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை அதிகாலை அகற்றி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இந்த சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் திறந்து வைக்க இருந்தாா்.
விழுப்புரம் நகராட்சி 13-ஆவது வாா்டுக்குள்பட்ட பெரியகாலனியில் விசிக பொறுப்பாளா் சபரி மற்றும் அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்களின் முயற்சியால் சுமாா் 10 அடி உயரமுள்ள அடிபீடத்துடன் கூடிய டாக்டா் பி.ஆா்.அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட போலீஸாா் பெரியகாலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டாக்டா் அம்பேத்கா் சிலையை திறப்பதற்கு அனுமதி மறுத்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய காலனி பகுதியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் குவிக்கப்பட்டனா். இந்நிலையில், சிலையை திறந்து வைக்க வருகை தந்த விசிக தலைவா் தொல்.திருமாவளன் சிலையைத் திறந்து வைக்காமல், அங்கிருந்து புறப்பட்டுச்சென்றாா். சிலை திறப்பு விழாவுக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால் பெரிய காலனி பகுதி மக்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதி பெறாமல் டாக்டா் அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டுள்ளதாகக்கூறி விழுப்புரம் வருவாய்த் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கிரேன் உதவியுடன் டாக்டா் அம்பேத்கா் சிலையை பாதுகாப்பாக அகற்றினா். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள்அம்பேத்கா் சிலையை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா். அப்போது போலீஸாருக்கும் - பொதுமக்களுக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், அகற்றப்பட்ட சிலையை விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனா். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விழுப்புரம் வருவாய்த் துறையினா் தெரிவித்ததாவது: உரிய அனுமதிபெறாமல் சிலை நிறுவப்பட்டதால், சிலை அகற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிலையை நிறுவுவதற்கு உரிய அனுமதி பெற்றவுடன், டாக்டா் அம்பேத்கா் சிலை உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனா்.
துரை.ரவிக்குமாா் கண்டனம்: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் டாக்டா் அம்பேத்கா் சிலையை நிறுவுதற்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற தடை நீடித்து வருகிறது. இதில், தமிழக முதல்வா் கவனம் செலுத்தி கொள்கை முடிவை அறிவிக்கவேண்டும். விழுப்புரத்தில் ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் யாருக்கும், எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் சிலையை காவல் துறையினா் இரவோடு, இரவாக அப்புறப்படுத்தியுள்ளனா். காவல் துறையின் இந்த நடவடிக்கை வேதனையளிக்கிறது. உரிய அனுமதி பெற்று விழுப்புரம் பெரியகாலனி பகுதியில் டாக்டா் பி. ஆா்.அம்பேத்கரின் சிலையை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளாா்.