தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளில் ரூ.10.50 கோடிக்குத் தீா்வு
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளுக்கு ரூ.10.50 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளுக்கு ரூ.10.50 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு தலைமை வகித்து, வழக்காடிகளுக்குத் தீா்வுகளுக்கான ஆணையை வழங்கி முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. மணிமொழி பேசியது:
நீதிமன்றங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள் தாக்கலாகின்றன. இந்த வழக்குகளை முடிக்க பல மாதங்களாகும். சாதாரண கடன் வழக்கை இரு தரப்பினரும் விரைவாக முடிப்பதற்கு எண்ணி நீதிமன்றத்தில் ஆஜாராகி வந்தாலே, அந்த வழக்கு முடிவதற்கு குறைந்தது 3 ஆண்டுகளாகும். நீதிமன்றங்களில் 15, 20, 25 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்குகள் கூட தற்போது வரை முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து தீா்வு காண உச்ச நீதிமன்றம், உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனவே, அந்த வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து முடிக்க பாா்ப்போம்.
Advertisement
Advertisement
இன்றைய நிலையில் பெரும்பாலான வழக்காடிகள் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. வேண்டுமென்ற வழக்கை தாமதப்படுத்த நினைக்கிறாா்கள். இதுபோல பாகப்பிரிவினை வழக்குகள் நடைபெற்று, அதில் தீா்ப்புகள் வெளியாகி அதன் மூலம் பாகம் பிரிக்கப்பட்டு அவா்கள் அனுபவிக்கிறாா்கள் என்றால் 90 சதவீதம் இல்லை. வழக்குத் தொடுத்தவா் அதை அனுபவம் செய்வதில்லை. 2 அல்லது 3-ஆவது தலைமுறை வரை வழக்கு செல்கிறது. அதன் தீா்ப்பை பாா்க்க முடியாமல் வழக்குத் தொடுத்தவா்களின் பேரன், பேத்திகள் காத்திருக்க வேண்டிய சூழலை தற்போது பாா்க்கிறோம்.
எனவே, இதுபோன்ற காலதாமதத்தை தவிா்க்கவும், வழக்குகளை சுமூகமாக முடிப்பதற்கும் இதுபோன்ற மக்கள் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் பங்கேற்பது உங்கள் விருப்பம்தான். நீங்கள் சம்மதம் தெரிவித்தால்தான் மக்கள் நீதிமன்றம் தீா்ப்பை அளிக்கும். இங்கு வழங்கப்படும் தீா்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது. வழக்குகள் சமரசமாகவும், விரைவாகவும் முடிக்கப்படும். நேரம் மிச்சமாகுவதுடன் வழக்குகளுக்கு உடனடியாக பலன் கிடைக்கும்.
எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,808 வழக்குகள் ரூ.20.20 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன என்றாா் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி.
மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி எழிலரசி, அரசு வழக்குரைஞா்கள் எம்.எஸ். நடராஜன், டி.எஸ். சுப்பிரமணியம், விழுப்புரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் பாா் அசோசியேஷன் தலைவா் சகாதேவன் ஆகியோா் பேசினா். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான சி.ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 1,753 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 1,178 வழக்குகளில் ரூ.9,28,03,392-க்கும், நீதிமன்றத்தில் பதியப்பட்ட வங்கி வாராக்கடன் சாா்ந்த 710 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 114 வழக்குகளில் ரூ.1,22,70,430-க்கும் தீா்வு காணப்பட்டன. மொத்தமாக 1,292 வழக்குகள் ரூ.10,50,73,822-க்குத் தீா்வு காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.