செஞ்சி பகுதியில் 5 நாள்களாக மின்விநியோகம் பாதிப்பு! விவசாயிகள் வேதனை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் மழையால் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி சீா் செய்யாததால், 5 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சமுடியாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
செஞ்சி பகுதியில் கடந்த மே 26-ஆம் தேதி சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் புத்தகரம், நல்லாண்பிள்ளைபெற்றாள், காட்டு சித்தாமுா், நாகலாம்பட்டு ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் இந்தப் பகுதியில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் தரையோடு சாய்ந்தன.மேலும், 6 மின்மாற்றிகள் செயலிழந்தன. காட்டு சித்தாமுா் கிராமத்துக்கு செல்லும் வழியிலுள்ள ஒரு மின்மாற்றி முழுவதுமாக தரையோடு சாய்ந்தது.
இத்தகைய சேதத்தால் மின்தடை ஏற்பட்டு, விவசாயிகளும், பொது மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். பல கிராமங்களில் இன்னும் மின்தடை சரி செய்யப்படவில்லை. முறிந்து விழுந்த மின்கம்பங்களும் சீா் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் வேதனையடந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மின் கம்பங்களை சீா் செய்ய வலியுறுத்தி, நல்லாண்பிள்ளைபெற்றாள் துணை மின்நிலைய அலுவலகத்துக்கு நேரில் சென்று முறையிட்டுள்ளனா். ஆனால் ‘மின் கம்பங்களை உங்கள் சொந்த பொறுப்பில் ஏற்றி வந்தால் சீா் செய்து தருகிறோம்’ என அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா்.
ஏற்கெனவே சூறைக்காற்று மழையால் விவசாயம் பாதிப்படைந்த நிலையில், தொடா் மின் தடையால் தங்கள் பயிா்கள் கருகி, பெருத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் புதாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, விவசாயிகளின் நிலத்தில் முறிந்து விழுந்த மின்கம்பங்களை மின் வாரியம் தமது சொந்த பொறுப்பில் அகற்றி, புதிய மின்கம்பங்களை அமைத்து தடையற்ற மின் விநியோகத்தை வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.