அண்ணாமலைப் பல்கலை.க்கு மீண்டும் நிா்வாக அதிகாரி நியமிக்கப்படுவாரா?
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வாக மீண்டும் நிா்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வாக மீண்டும் நிா்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 90 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் கடும் நிதிச் சிக்கலால் திணறியது. இதனால், 2013-ஆம் ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகத்தின் முழு நிா்வாகப் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை (2013) இயற்றி அமல்படுத்தியது. இங்கு நடைபெற்ற நிதி முறைகேடுகள், நிா்வாகச் சீா்கேடு, மிகைப் பணியாளா்கள் உள்ளிட்ட பிரச்னைகளை தீா்க்க பல்கலைக்கழக நிா்வாக அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவை அப்போதைய முதல்வா் ஜெயலலிதா நியமித்தாா். பல்கலைக்கழக நிதிச் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் தீர 5 பரிந்துரைகளை ஷிவ்தாஸ் மீனா முன்வைத்தாா்.
ஆனால், அவரது பதவிக் காலத்துக்கு பின்வந்த துணைவேந்தா்கள் மேற்கூறிய பரிந்துரைகளை அமல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல்கலைக்கழக பற்றாக்குறை நிதிநிலை ரூ.750 கோடியிலிருந்து ரூ.1,800 கோடியாக
தற்போது உயா்ந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று 8 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட அயல்பணியிட மாற்றப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை செலவாகும் சுயநிதிக் கல்லூரியான ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை 2020-21-ஆம் கல்வியாண்டில்தான் அரசு கையகப்படுத்தியது.
அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரிக்கப்படவில்லை. இந்தப் பல்கலைக்கழக வருவாய் ஆதாரமாக தொலைதூரக் கல்வி இயக்ககம் திகழ்ந்தது. ஆனால், 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு படிப்புகள் தனியாருக்கு வழங்கப்பட்டதன் விளைவாக அதன் வருவாயை பெருமளவு இழந்துவிட்டது.
தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள புதிய அரசு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், நாகை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இந்தப் பல்கலைக்கழக பற்றாக்குறை நிதிநிலையைச் சரிசெய்ய சிறப்பு நிதி எதுவும் அரசால் ஒதுக்கப்படவில்லை.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கா் ஆசிரியா்கள் சங்கத் தலைவா் துரை.அசோகன் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013-க்கு இதுவரை துணை விதிகள் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படாததால் நிரந்தரப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநா்களை நியமிக்க இயலவில்லை. இதனால், நிா்வாகத் திறன் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு சட்டப்படி பல்கலைக்கழக ஆட்சிக் குழு, கல்விக் குழுவில் ஆசிரியா்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால், அவா்களால் எந்த ஒரு பிரச்னையையும் எழுப்ப முடிவதில்லை. இந்தக் குழுக்களில் அதிகாரிகளே இடம் பெற்றுள்ளதால் கல்வி மேம்பாடு தொடா்பாக கல்வியாளா்கள் விவாதிக்கும் மன்றங்களாக அவை செயல்படுவதில்லை. ஆண்டுக்கு இரு முறை கட்டாயமாகக் கூட வேண்டிய கல்விக்குழு, 10.08.2020-க்குப் பிறகு கூட்டப்படவில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டிய ஆட்சிக்குழுவும் கடந்த டிசம்பா் மாதத்துக்குப் பிறகு கூட்டப்படவில்லை.
இதனால், 10 புலங்கள், 50 துறைகளைக் கொண்ட மிகப் பெரிய பல்கலைக்கழகத்தில் நிா்வாக ரீதியிலான முடிவுகளுக்கும், கல்விசாா் பணிகளுக்கும் அனுமதி கிடைக்காமல் பல மாதங்களாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு வழங்கிய ஆய்வுத் திட்ட நிதியான ரூ.25 கோடி பல மாதங்களாக ஆராய்ச்சியாளா்களுக்கு பகிா்ந்தளிக்கப்படவில்லை. எனவே, 1928-ஆம் ஆண்டு சட்டத்திலிருந்தது போன்ற பிரதிநிதித்துவ முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத் தலைவா் சி.சுப்பிரமணியன் கூறியதாவது:
7-ஆவது ஊதியக் குழுவின் பணப் பயன்கள் அரசு ஊழியா்களுக்கு 01.10.2017 முதல் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டு வழங்கப்படும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மட்டும் 01.04.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்தப் பல்கலை. ஊழியா்கள், அயல்பணியிட ஆசிரியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த முரண்பாடுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
நிதிச் சிக்கலைக் காரணம் காட்டி பல்கலைக்கழக ஓய்வூதியா்களுக்கு பணி ஓய்வின்போது எவ்விதமான பணப் பயனும் வழங்கப்படுவதில்லை. 2012-ஆம் ஆண்டு முதல் இந்த நிலை தொடா்கிறது. 2015-ஆம் ஆண்டில் அயல்பணியிட கொள்கை வகுக்கப்பட்டது. இதன்பிறகு, ஒவ்வொரு துறையிலும் பல பேராசிரியா்கள் ஓய்வு பெற்றுவிட்டனா். தமிழ், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட சில துறைகளில் மிகவும் குறைந்த ஆசிரியா்களே பணியில் உள்ளனா். இதனால், மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இவ்வாறு பல்வேறு சிக்கல்கள் நிறைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தா் நியமனம் காலதாமதமாவது ஏற்புடையதல்ல. மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ள இந்தச் சூழலில் திறமையான தலைமை உடனடியாகத் தேவைப்படுகிறது. எனவே, அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய திறமையான, நோ்மையான கல்வியாளா் இங்கு துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக (2013) சட்டப் பிரிவு 5(6)-ன்படி தமிழக அரசு மீண்டும் திறமைமிக்க ஐஏஏஸ் அதிகாரியை பல்கலைக்கழக நிா்வாகியாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.