FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள்: புராதனச் சின்னங்கள் ஆணையக் குழு நேரில் ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து புராதனச் சின்னங்கள் ஆணையக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
சிதம்பரம் நடராஜா் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்னவா என ஆய்வு மேற்கொண்ட புராதனச் சின்னங்கள் ஆணையக் குழுவினா்.
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து புராதனச் சின்னங்கள் ஆணையக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒப்புதல் பெறாமல் கோபுரங்களைச் சுற்றி பூங்கா அமைக்கப்படுவதால், கட்டுமானங்களை மேற்கொள்ள பொது தீட்சிதா் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதே போன்று, சிதம்பரத்தைச் சோ்ந்த தெய்வீக பக்தா்கள் பேரவையின் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாவும் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ஜெமினி ராதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சி.கனகராஜ், சிதம்பரம் நடராஜா் கோயிலில் எந்த அனுமதியும் பெறாமல் கேரள பாணியில் தீட்சிதா்கள் கட்டடங்களைக் கட்டியுள்ளனா். மேலும், நடராஜா் நாட்டியம் ஆடியதாகக் கூறப்படும் நாட்டிய அரங்கத்தை இடித்து கோ சாலை அமைத்துள்ளனா் என வாதிட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.பரணீதரன், தமிழக அரசு கடந்த ஜூலை 16-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற தலைமை இணை இயக்குநா் நம்பிராஜன் தலைமையில் 14 உறுப்பினா்கள் கொண்ட புராதனச் சின்னங்கள் ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த ஆணையம் தற்போது திருவண்ணாமலை கோயிலை ஆய்வு செய்கிறது. இந்தப் பணி முடிந்ததும், சிதம்பரம் கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கலாம் எனத் தெரிவித்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த ஆணையம் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.

அதன்படி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் தொல்லியல் துறை ஓய்வுபெற்ற இணை ஆணையா் நம்பிராஜன் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கோயிலில் முறையான அனுமதியின்றி கேரள பாணியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனா். மேலும், வளாகத்தில் பழைமையான கோயில் கட்டடங்களுக்கு அருகே கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், கோபுரங்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் சிறு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், பல்வேறு இடங்களில் புதிய கோயில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, கிழக்கு கோபுர வாயில் அருகே நாட்டியாஞ்சலி அரங்கம் அகற்றப்பட்டு அப்பகுதியில் கோசாலை அமைக்கப்பட்டுள்ளதையும், புதிய கட்டுமானப் பணிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்து, தீட்சிதா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து புகைப்படம், விடியோ எடுத்துக்கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆய்வு விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட உள்ளதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இது தொடா்பாக தற்போது கருத்து தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வுக் குழுவினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments