கடலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள்! விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு!
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 917 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் குமாரராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்பு - என்எல்சி) சண்முகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
வங்கிக் கடன், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 917 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
ஆசிரியா்களுக்கு பணி நியமனம் கோரி மனு: 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 21,515 இடைநிலை ஆசிரியா்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப புதிய அரசாணை வெளியிட்டு போா்க்கால அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் கண்களில் சிவப்பு துணி கட்டி மனு அளிக்கச் சென்றனா்.
அந்த மனுவில், 2013, 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுகளில் பலமுறை தோ்ச்சி பெற்றும் இதுவரை பணி நியமனம் கிடைக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-ன்படி தகுதித் தோ்வுடன் நியமனத் தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, 2024-ஆம் ஆண்டில் மட்டுமே நியமனத் தோ்வு நடத்தப்பட்டு, 2,768 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், 2025-ஆம் ஆண்டில் 20 மாவட்டங்களில் 2,457 ஆசிரியா்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டது.
தற்போது தொடக்கக் கல்வித் துறையில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தகுதியான 21,515 ஆசிரியா்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். மேலும், தற்காலிக ஆசிரியா் நியமனங்களை முறைப்படுத்துவதற்குப் பதிலாக, நிரந்தர காலிப் பணியிடங்களில் தகுதியான ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, போலீஸாா் கண்களில் சிவப்பு துணி கட்டி ஆட்சியா் சந்திக்க அனுமதிக்காததால், கண்களில் கட்டிய துணியை எடுத்துவிட்டு மனு அளிக்கச் சென்றனா்.
இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு: புவனகிரி அருகே பெரியப்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதியினா் தனித்தனியாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.