நெய்வேலி இளைஞா் கொலை வழக்கு: மேலும் 4 போ் கைது
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). ரௌடிகளான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2 பகுதி அரசு டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானத்தில் ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் கடந்த 16-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாராம்.
இந்த தகவலை தெரிந்துகொண்ட கோபி தனது நண்பா்களுடன் அங்கு சென்று அரிவாளால் வெட்டியதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கோபி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய 9 போ் கடந்த 20-ஆம் தேதி இந்திரா நகா், கலைஞா் காா்டன் அருகே உள்ள முந்திரிக் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 4 போ் வடக்குமேலூா் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, வடக்குத்து பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (25), விஜி(30), காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த தில்சன் (19), கே.எஸ்.கே. நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (22) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.