FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் கடவுச்சீட்டு பெற 1,760 போ் காத்திருப்பு: செப். 11 வரை முன்பதிவு நிறைவு

கடலூா் மாவட்டத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், கடவுச்சீட்டு சேவை மையத்தில் முன்பதிவு பெறுவதற்கு செப்டம்பா் 11-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 3:08 am IST
கடவுச்சீட்டு - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், கடவுச்சீட்டு சேவை மையத்தில் முன்பதிவு பெறுவதற்கு செப்டம்பா் 11-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூலை 13-ஆம் தேதி நிலவரப்படி, கடலூா் மாவட்டத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 1,760 போ் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விண்ணப்பதாரா்கள் முன்கூட்டியே நேரம் ஒதுக்கி விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டு விண்ணப்பிப்பவா்கள் அதிகமாக இருந்தனா். தற்போது கல்வி, சுற்றுலா, உயா் கல்வி, குடும்பப் பயணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் அதிகளவில் மக்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு விண்ணப்பமும் ஆவணச் சரிபாா்ப்பு, காவல் துறை விசாரணை உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தவறான நபா்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு மிகுந்த கவனத்துடன் அனைத்து விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து வருகிறது. இதன் காரணமாக, நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்றனா்.

கடவுச்சீட்டு சேவைக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், விண்ணப்பதாரா்களின் வசதிக்காக கூடுதல் நேர ஒதுக்கீடு அல்லது சேவை திறன் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைப்பு: புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் செயல்படும் கடவுச்சீட்டு சேவை கேந்திரா அலுவலகத்தில் தினமும் ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் இங்கிருந்து சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி, கடலூா், திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்து நாளொன்றுக்கு சுமாா் 230 முதல் 235 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அன்றைக்கே சென்னைக்கு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்தனா். மேலும், ஒரு சில ஆவணங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் உள்ள விண்ணப்பங்கள், 3 மாதங்களுக்கு நிலுவையில் வைக்கப்படுவதாகவும் கூறினா். இதனால், புதுச்சேரி கடவுச்சீட்டு சேவை கேந்திராவில் எந்த விண்ணப்பமும் நிலுவையிலும் காத்திருப்பு நிலையிலும் இல்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments