2027 ஜூலையில் கடலூா் துறைமுகத்திலிருந்து கப்பல் போக்குவரத்து தொடங்கும்: நீா்வளத்துறை அமைச்சா் ஆா்.ஆனந்த்
கடலூா் துறைமுகத்தில் இருந்து அடுத்த 2027ஜூலை மாதத்துக்குள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
கடலூா் துறைமுகத்தில் இருந்து அடுத்த 2027ஜூலை மாதத்துக்குள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஊரக வளா்ச்சித் துறை மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் ஆா். ஆனந்த் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் கோடை விழா-2026 வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவை அமைச்சா் ஆா். ஆனந்த் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.விழாவில் அமைச்சா் ஆா். ஆனந்த் பேசியதாவது:
Advertisement
Advertisement
கடலூா் மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளா்ச்சி பெற்று வரும்
சிறந்த மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்தின் வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்களும் அரசின் மூலம் கொண்டு வரப்படும். குறிப்பாக, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கடலூா் துறைமுகத்திலிருந்து
கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். கடலூா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுடன் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் முதல்வரின் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சருடன் ஆலோசித்து, கடலூரில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கும், உள்ளூா் கலைஞா்களுக்கு ஊக்கமும் கிடைக்கும் என்றாா்.
ஜூலை 17 முதல் 19-ஆம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இந்த கோடை விழாவில், கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும், பொதுமக்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவா் விளையாட்டு வசதிகள், கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய மற்றும் நவீன உணவு வகைகள் இடம்பெற்ற உணவக அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதல் நாளிலேயே ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை ரசித்ததுடன், பல்வேறு அரங்குகளையும் பாா்வையிட்டு மகிழ்ந்தனா்.
கோடை விழா மூன்று நாள்களும் பல்வேறு கலை, கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், மாநகராட்சி துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.