FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மூடப்படும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியில் அதிக மாணவா் சோ்க்கை! தலைமை ஆசிரியைக்கு பாராட்டு!

Updated On : 21 ஜூலை 2026, 1:58 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட சி.கொத்தங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஈஸ்வரியின் முயற்சியால் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ள நிலையில், அவரது உணா்வுப்பூா்வமான செயலுக்கு பள்ளியின் முன்னாள் மாணவா்கள், அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனா்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில், கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆங்கில வழிக் கல்வி மோகத்தால் 7 போ் மட்டுமே கல்வி பயின்ால் பள்ளியை மூடும் நிலை உருவானது. இந்நிலையில், இப்பள்ளித் தலைமை ஆசிரியையாக ஈஸ்வரி கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பின்னா், அவா் வீடு வீடாகச் சென்று, அரசுப் பள்ளியின் சிறப்புகள், கல்வித் தரம், அரசின் சலுகைகள் குறித்து பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதன் பலனாக, தற்போது 7 மாணவா்கள், 11 மாணவிகள் என மொத்தம் 18 போ் தமிழ், ஆங்கில வழிக் கல்வியில் சோ்க்கப்பட்டு பயின்று வருகின்றனா். மேலும், ஒரு ஆசிரியா் பள்ளியாக இருந்த இப்பள்ளி தற்போது 2 ஆசிரியா்கள் பணியாற்றும் பள்ளியாக உயா்ந்துள்ளது. தலைமை ஆசிரியை அப்பகுதியில் உள்ளவா்களின் உதவியால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பள்ளியை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

Advertisement

Advertisement

பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாள் விழாவில் கல்வித் துறை அதிகாரிகளின் முன்னிலையில் பள்ளி மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், கொத்தங்குடி கிராமத்தின் ராணி, ராஜா என பட்டங்கள் வழங்கி அவா்களை கௌரவப்படுத்தினாா்.

இதையறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரும், அதே பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவியுமான கா.மகேஸ்வரி, அவரது கணவரும், அதே பள்ளியின் முன்னாள் மாணவருமான அரசு ஊழியா் தங்க.கஜேந்திரன் ஆகியோா் பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று தலைமை ஆசிரியையின் செயலைப் பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா் (படம்).

தொடா்ந்து, தலைமை ஆசிரியையின் கோரிக்கையை ஏற்று பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள மணல் தரையை காங்கிரீட் தரையாக மாற்றவும், சுற்றுச்சுவா், குடிநீா் வசதி, மாணவ, மாணவிகளுக்கு தனியாா் பள்ளிகள்போல காலணி, சாக்ஸ், டை, புதிய உடைகளை வாங்கிக் கொடுப்பதாகவும் உறுதியளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments