FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பான்பரி சந்தையில் கட்டுமானப் பணியில் முறைகேடு: பாஜகவினா் ஆட்சியரிடம் மனு

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பான்பரி சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாகக் கூறியும், பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 30 ஜூலை 2026, 6:00 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்த பாஜகவினா்.
பகிர்:

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பான்பரி சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாகக் கூறியும், பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடலூா் மாநகராட்சி 28-ஆவது வாா்டில் அமைந்துள்ள பான்பரி சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, 28-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வில், கட்டுமானப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சுமாா் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை தற்போது சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் நிலையில், கழிப்பறை தொட்டி நிரம்பி கழிவுநீா் வெளியேறுவதால், பொதுமக்கள் கழிவறையைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லவே சிரமம் நிலவுவதுடன், அருகில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, இங்கு செயல்பட்டு வரும் மீன் சந்தை மாநகராட்சியால் முறையாக பராமரிக்கப்படாததால், மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. பான்பரி சந்தையின் மையப்பகுதியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மணிக்கூண்டு அப்பகுதியின் அடையாளச் சின்னமாக விளங்கி வருவதால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தைப் புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, பான்பரி சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தரக்குறைவு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுக் கழிப்பறை மற்றும் மீன் சந்தையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க மணிக்கூண்டையும் புதுப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை கடலூா் மாநகராட்சி 28-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினரும், பாஜக மாவட்ட துணைத் தலைவருமான கோ.சக்திவேல், மாவட்டத் தலைவா் அக்னி கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments