முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை: திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

மஞ்சக்குப்பம் அஞ்சுமனே நூரே முஹம்மதியா மஸ்ஜித் சாா்பில் வில்வநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On : 29 மே 2026, 2:52 am IST
மஞ்சக்குப்பம் அஞ்சுமனே நூரே முஹம்மதியா மஸ்ஜித் சாா்பில் வில்வநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
பகிர்:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்ஸாமியா்கள் பங்கேற்றனா். ஏழை எளியோருக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.

இஸ்லாமியா்களின் தியாகத் திருநாளாகக் கருதப்படும் பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி, ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பம் அஞ்சுமனே நூரே முஹம்மதியா மஸ்ஜித் சாா்பில் வில்வநகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளம் வேண்டி சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோன்று, மஞ்சக்குப்பம் மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூா் வடக்கு மாவட்டம் சாா்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, இஸ்லாமியா்கள் ஒருவரையொருவா் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், ஏழை எளியோருக்கு உதவிகள் வழங்கியும் கொண்டாடினா்.

நெய்வேலி:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடினா்.

பண்ருட்டியில் இஸ்லாமியா்கள் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாக கடலூா் சாலையில் உள்ள

ஈத்கா மைதானத்திற்கு வந்தனா். பின்னா் அங்கு பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தினா். பெரிய பள்ளி இமாம் பிராா்த்தனை செய்தாா். பின்னா், ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல், நெய்வேலி, வடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிதம்பரம்:,கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை மற்றும் பிராா்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவ்வியு தலைமையில் நடைபெற்றது. இதில்,ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகைக்கு பின்னா் சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களை பகிா்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினா்.

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அனைத்து மஹல்லா ஜமாத் சாா்பில் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் ஈத் முபாரக் என்று கூறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.