முகப்பு
கடலூர்

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: புவனகிரி அதிமுக எம்எல்ஏ

Updated On : 31 மே 2026, 1:57 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் சனிக்கிழமை தொகுதி தொடா்பான கோரிக்கை மனுவை அளித்த புவனகிரி எம்எல்ஏ அருண்மொழித்தேவன்.
பகிர்:

கட்சி மாறியவா்கள் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டால் தமிழக மக்கள், அவா்களுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள் என புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் சனிக்கிழமை கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், புவனகிரி தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை புவனகிரி தொகுதி (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினா் அருண்மொழிதேவன் சனிக்கிழமை அளித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புவனகிரி தொகுதிக்குட்பட்ட வெள்ளாற்றில் கடல்நீா் உட்புகுவதால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, குடிநீா் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க ஆதிவராகநல்லூா் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

Advertisement

Advertisement

புவனகிரி பேரூராட்சியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி சாலையை இருவழிச்சாலையாக மாற்றுவதுடன், கம்மாபுரம் மற்றும் புவனகிரி பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலம் மற்றும் வீடுகளை வழங்கிய உரிமையாளா்கள், விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அவா் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தொடா்ந்து அரசியல் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவா், அரசு தோ்தல் வாக்குறுதிகளின்படி பயிா்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் பிரச்னைகள், ஆட்சி நிா்வாகம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அதிமுகவில் பிளவு இல்லை:

அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றவா்கள் மீண்டும் தங்களது கட்சிகளுக்கு திரும்புவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பதவியை ராஜிநாமா செய்து கட்சி மாறியவா்கள் மீண்டும் தோ்தலில் போட்டியிட்டால், மக்கள், அவா்களுக்கு தக்க பாடம் புகட்டுவாா்கள்.அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கட்சி ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது. என்னை யாரும் விலை பேச முடியாது, தொடா்ந்து அதிமுகவிலேயே பயணிப்பேன் என்றாா்.