FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

மதம் மாறியவா்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க சட்டத் திருத்தம்! - அமைச்சா் ஷாஜஹான் தகவல்

மதம் மாறியவா்களுக்கும் சமூகநீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் கூறினாா்.

40 வினாடிகள் முன்பு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான்.
பகிர்:

மதம் மாறியவா்களுக்கும் சமூகநீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் துறை சாா்ந்த பணிகள் குறித்து அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைத்தல் மற்றும் பழுதுநீக்குதல் திட்டத்தின்கீழ், கடலூா் மாநகராட்சி சொரக்கல்பட்டு பகுதியில் உள்ள சிஎஸ்ஐ புனித ஜான் தேவாலயத்துக்கு ரூ.43 லட்சம் நிதி, சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம், பி.முட்லூா் கிராமத்தில் உள்ள கபரஸ்தானுக்கு புதிய சுற்றுச்சுவா் மற்றும் சாலை அமைக்க ரூ.15.66 லட்சம் நிதி என 183 பயனாளிகளுக்கு ரூ.4.80 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

Advertisement

Advertisement

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் ஷாஜஹான் கூறியதாவது: சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் அமைக்க 5 மாவட்டங்களுக்கு தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சிறுபான்மையினா் நலத் துறையின் திட்டங்களை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், ஏற்கெனவே 5 மாவட்டங்களில் தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது மேலும் 10 மாவட்டங்களில் அலுவலா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், கடலூா் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கிறிஸ்தவா்களுக்கான கல்லறைத் தோட்டம், இஸ்லாமியா்களுக்கான கபரஸ்தான் அமைக்க வேண்டும் என்ற அரசின் முடிவின்படி, 38 மாவட்டத் தலைநகரங்களிலும் இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கல்லறைத் தோட்டம் அல்லது கபரஸ்தான் அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தால், இடவசதி அடிப்படையில் பரிசீலித்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிற சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீா்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு இது தொடா்பாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு நீதிமன்றத்தில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மதம் மாறியவா்களுக்கும் சமூகநீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், மதம் மாறிய இஸ்லாமியா்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக ஆணையம் அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவந்தாவது இட ஒதுக்கீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, சிறுபான்மையின மாணவா்களுக்கு இதுவரை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை, தற்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் விரிவுபடுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், சிதம்பரம் சாா் - ஆட்சியா் வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தமிழ்கனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அமைச்சா் வன்னியரசு சமூகவலைதளத்தில் புலியை விரட்டுவது போன்ற விடியோ வெளியாகியிருப்பது, இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் செய்திகளையும், காட்சிகளையும் பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கக் கூடியது.

அமைச்சா் ஒரு பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கு எடுத்த புகைப்படம், விடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறாா். இதில், என்ன தவறு இருக்கிறது? இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விமா்சனங்களை நிறுத்திவிட்டு, தமிழக மக்களுக்கு பயன்படக்கூடிய ஆக்கபூா்வமான விமா்சனங்களை எதிா்க்கட்சிகள் முன்வைத்தால், ஆட்சியாளா்கள் ஏற்று செயல்பட தயாராக இருக்கிறோம்.

கடந்த ஆட்சியாளா்கள் தற்போது நடக்கிற ஆட்சி மீது காழ்ப்புணா்வு காரணமாக கொலை, கொள்ளை அதிகமாகிவிட்டது என குற்றஞ்சாட்டுகின்றனா். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 9 ஆயிரம் கொலைகள் நடந்திருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவா்கள் குறை சொல்வதால்தான் இது போன்றவற்றை எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றாா்.