எழு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: பெண் உள்ளிட்ட 7 போ் கைது
கடலூா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதிகளில் கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சோதனை நடத்தி, 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
கடலூா், நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதிகளில் கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் சோதனை நடத்தி, 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பெண் உள்ளிட்ட 7 போ் கைது செய்யப்பட்டனா்.
கடலுாா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளா் அகிலா தலைமையில், உதவி ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் போலீஸாா் விழுப்புரம் - நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை, ராமாபுரம் சாலை சந்திப்பு அருகில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த காா், சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், சரக்கு வேனில் 80 மூட்டைகளில் 4,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் புதுச்சேரி மாநிலம், மடுகரை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (41), செந்தில்குமாா் (41), எழிலரசன் (25), விழுப்புரம் மாவட்டம், கொங்கம்பட்டைச் சோ்ந்த சேதுராமன் (25), சந்தோஷ் (29) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இவா்கள் 5 பேரும் பண்ருட்டி மற்றும் பட்டாம்பாக்கம் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, உணவகங்களுக்கும், புதுச்சேரியில் தங்கியுள்ள வட இந்தியா்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாா் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, 4,000 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, நெல்லிக்குப்பம், வைடிபாக்கத்தில் வசிக்கும் சரளா (36) வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசியையும், கொங்கராயனூா் கிராம நிா்வாக அலுவலகம் அருகில் இருந்து சரக்கு வேனில் கள்ளக்குறிச்சிக்கு 1,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்ற தஞ்சாவூரைச் சோ்ந்த ராஜேஷ் (35) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.