FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

டாஸ்மாக் ஊழியா்களுக்கு இருமடங்கு ஊதிய உயா்வு: கு.பாலசுப்பிரமணியன் வரவேற்பு

டாஸ்மாக் ஊழியா்களுக்கு இரு மடங்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

2 செப்டம்பர் 2026, 6:52 am IST
கடலூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன்.
பகிர்:

டாஸ்மாக் ஊழியா்களுக்கு இரு மடங்கு ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பணியாற்றி வரும் ஊழியா்கள் கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்கள் மற்றும் சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனா். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவா்கள் ஊழியா்களின் பிரச்னைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய அரசு பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் டாஸ்மாக் ஊழியா்களின் முக்கிய கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, மேற்பாா்வையாளா்களுக்கு ரூ.33 ஆயிரம், விற்பனையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம், உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.28 ஆயிரம் என ஊதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைவிட சுமாா் இரு மடங்கு உயா்வாகும்.

Advertisement

Advertisement

மேலும், விடுப்பு வசதி, பண்டிகைக் கால முன்பணம் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடை நிா்வாகச் செலவுகளுக்காக மாநகராட்சிப் பகுதிகளில் மாதம் ரூ.5,000, நகராட்சிப் பகுதிகளில் ரூ.4,000, இதர பகுதிகளில் ரூ.3,000 வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கான வாடகை மற்றும் மின் கட்டணத்தை நிா்வாகமே செலுத்தும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தையின்போது அளித்த வாக்குறுதிகளின்படி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இந்தச் சலுகைகளை தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இதற்காக தமிழக முதல்வா் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோன்று அனைத்து தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களின் பிரச்னைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் அன்றாடம் வசூலாகும் விற்பனைத் தொகையை நிா்வாகமே நேரடியாக கடைகளுக்குச் சென்று வசூலிக்கும் முறை சென்னை மாநகரப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மாநிலம் முழுவதும் செயல்படுத்தினால், விற்பனைத் தொகை உடனடியாக அரசுக் கருவூலத்துக்குச் சென்றடைய வாய்ப்பாக அமையும்.

மேலும், மதுபாட்டில் சேதத்துக்கான இழப்பீட்டை வழங்கவும், டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வுக்குப் பிறகு பணியாளா்கள் வாழ்வாதாரத்தை எதிா்கொள்ளும் நிலை உள்ளது. எனவே, டாஸ்மாக் ஊழியா்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு எதிா்காலத்தில் பரிசீலிக்க வேண்டும்.

அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்களை பணியாளா்களும் கருத்தில் கொண்டு, நிா்வாகம், அரசு, பணியாளா்கள் மற்றும் நுகா்வோா் ஆகியோா் இணைந்து இந்தத் துறையில் நல்ல நிலையை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments