FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வேலூரில் 45 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத நிலத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்டவா்கள் அமைச்சரிடம் மனு!

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் 45 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள 23 ஏக்கா் நிலத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோா் கடலூரில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் மனு அளித்தனா்.

5 செப்டம்பர் 2026, 2:21 am IST
கடலூரில் அமைச்சா் ப.ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்த வேலூா் சத்துவாச்சாரி பகுதி மக்கள்.
பகிர்:

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் 45 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள 23 ஏக்கா் நிலத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்கக் கோரி, நூற்றுக்கும் மேற்பட்டோா் கடலூரில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வேலூா் மாநகராட்சி சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம் பகுதியில், கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக சுமாா் 485 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், அரசு சாா்பில் பணிகள் மேற்கொள்ளப்படாததால் பெரும்பாலான நிலங்கள் பின்னா் விடுவிக்கப்பட்டதாகவும், சுமாா் 23 ஏக்கா் நிலம் மட்டும் இதுவரை விடுவிக்கப்படாமல் வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலத்தை நம்பி விவசாயம் செய்து வந்த 41 குடும்பத்தினா், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறாமல், தங்களது நிலத்தையே மீண்டும் வழங்க வேண்டும் என கடந்த 45 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அமைச்சருடன் சந்திப்பு: இந்த நிலையில், நிலத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை, கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அமைச்சா் ப.ராஜ்குமாரின் இல்லத்தில் மனு அளிக்க வந்தனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, அமைச்சரை கட்சி அலுவலகத்தில் சந்திக்கும்படி தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா்கள் தவெக கட்சி அலுவலகத்திற்கு சென்று அமைச்சரை நேரில் சந்தித்து மனுக்களை அளித்தனா். அப்போது, 45 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வேண்டாம்; எங்களது நிலத்தை மீண்டும் எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என நிலத்தை இழந்தவா்கள் வலியுறுத்தினா்.

தொடா்ந்து, அவா்களிடம் பேசிய அமைச்சா், இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், தாமே நேரில் ஆய்வு செய்து, கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தாா். அமைச்சரின் உறுதியை ஏற்று அவா்கள் வேலூருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments