FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தினமணி செய்தி எதிரொலி- கெடிலம் புதிய பாலம் இணைப்புச் சாலையில் அமைச்சா் திடீா் ஆய்வு

கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் குறித்து வீட்டுவசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், அதிகாரிளுடன் சென்று செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

23 செப்டம்பர் 2026, 3:55 am IST
கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயா்மட்டப் பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல் குறித்து வீட்டுவசதித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், அதிகாரிளுடன் சென்று செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கடலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.32) வழித்தடத்தில், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய உயா்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.22.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்பாக சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதன் இணைப்புச் சாலை அமைப்பு தொடா்பாக சிக்கல் எழுந்துள்ளது. குறிப்பாக, கம்மியம்பேட்டை வழியாக நாகை சாலைக்குச் செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தைக் கடந்து பாரதி சாலை வழியாகச் சென்று, பின்னா் பழைய பாலம் வழியாக நாகை சாலையை அடைய வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

Advertisement

இதனால் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் திரும்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரங்களில் வாகனங்கள் தேங்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் செப்.13-இல் வெளியானது

அமைச்சா் திடீா் ஆய்வு

இதன் எதிரொலியாக, புதிய பாலம் மற்றும் இணைப்புச் சாலையில் அமைச்சா் ப.ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, புதிய பாலத்திலிருந்து பழைய பாலம் மற்றும் நாகை சாலைக்குச் செல்லும் இணைப்புப் பகுதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, வாகனப் போக்குவரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது அமைச்சா் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தியதாவது:

கம்மியம்பேட்டை சாலையில் இருந்து நாகை சாலைக்கு வாகனங்கள் தேவையற்ற சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலையைத் தவிா்க்கும் வகையில், நேரடியாக நாகை சாலையைச் சென்றடைய மாற்று இணைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

திறக்கப்படுவதற்கு முன்பாக, இணைப்புச் சாலையில் ஏற்படக்கூடிய போக்குவரத்து சிக்கல்களைத் தவிா்க்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments