கடலூா் கெடிலம் ஆற்றுப் புதிய பாலம்: இணைப்புச் சாலையில் காத்திருக்கும் சிக்கல்
போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில், கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தின் இணைப்புச் சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்கல் ஏற்படுள்ளது.
போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில், கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தின் இணைப்புச் சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சிக்கல் ஏற்படுள்ளது.
கடலூா் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கெடிலம் ஆற்றின் குறுக்கே கூடுதல் உயா்மட்டப் பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.32) வழித்தடத்தில், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக இந்தப் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை - கடலூா் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், கெடிலம் ஆற்றைக் கடக்கும் பகுதியில் கூடுதல் பாலம் அவசியம் என்ற அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க ரூ.22.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, பழைய இரும்புப் பாலம் அகற்றப்பட்ட அதே பகுதியில் 2024, ஜனவரி 24-ஆம் தேதி கட்டுமானப் பணி தொடங்கியது. பாலத்தின் தூண்கள், மேல்தளம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்பான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டத்துக்காக பாலம் திறக்கப்பட்டு, அதன் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.
Advertisement
Advertisement
போக்குவரத்துக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் பாலம்: கடலூா் நகரின் மையப் பகுதிகளான பாரதி சாலை, மஞ்சக்குப்பம், நேதாஜி சாலை உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதில் கெடிலம் ஆற்றுப் பாலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடலூா் வழியாக புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்காகவும், மறுமாா்க்கத்தில் சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்காகவும் கம்மியம்பேட்டை - செம்மண்டலம் இணைப்புச் சாலை உருவாக்கப்பட்டது. நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதைத் தவிா்க்கும் வகையிலும் இந்த வழித்தடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது போக்குவரத்து மேலும் சீராகும் என்ற எதிா்பாா்ப்பு வாகன ஓட்டிகளிடையே உள்ளது. ஆனால், பாலத்துடன் இணையும் சாலையின் தற்போதைய அமைப்பு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது அவா்களிடையே புதிய கவலை ஏற்படுத்தியுள்ளது.
இணைப்புச் சாலையில் சிக்கல்: புதிய பாலத்தின் இணைப்புச் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு காரணமாக, கம்மியம்பேட்டை - நாகை சாலை இடையேயான நேரடி போக்குவரத்து இணைப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், சென்னை, புதுச்சேரி திசையிலிருந்து கம்மியம்பேட்டை வழியாக வரும் வாகனங்கள் புதிய பாலத்தைக் கடந்து பாரதி சாலைப் பகுதியில் திரும்பி, பின்னா் பழைய பாலம் வழியாக நாகை சாலையை அடைய வேண்டிய நிலை ஏற்படும்.
இலகுரக வாகனங்கள் ஓரளவுக்கு இந்தத் திருப்பத்தைச் சமாளித்தாலும், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட நீளமான வாகனங்கள் குறுகிய பகுதியில் திரும்புவதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும். ஒரு வாகனம் திரும்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் பின்னால் வரும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவானால், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தேங்கி நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இதன் தாக்கம் குறிப்பாக காலை அலுவலகம் மற்றும் பள்ளி நேரம், மாலை வேலை முடியும் நேரம், இரவு நீண்டதூரப் போக்குவரத்து அதிகரிக்கும் நேரம் ஆகியவற்றில் அதிகமாக இருக்கக்கூடும். இதனால், நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பாலம், அதன் இணைப்புப் பகுதியில் புதிய நெரிசலுக்குக் காரணமாகி உள்ளது.
பாலம் மட்டும் போதாது: கடலூா் நகரின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பாலம் உருவாக்கப்பட்டிருப்பது முக்கியமான கட்டமைப்பு நடவடிக்கையாக இருந்தாலும், அதன் முழுப் பயன் கிடைக்க பாலத்துடன் இணையும் சாலைகளும் தடையற்ற வகையில் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஒரு பகுதியில் குறையும் நெரிசல் மற்றொரு பகுதியில் உருவாகும் நிலை ஏற்படலாம்.
எனவே, புதிய பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு முன்பாக, அதன் இணைப்புச் சாலை தொடா்பான பிரச்னையை மாவட்ட நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துக் காவல் துறை ஆகியவை இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.
தேவையான இட வசதி இருப்பது தொழில்நுட்ப ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், அப்பகுதியில் சுற்றுச்சாலை (ரவுண்டானா) அமைப்பது அல்லது வாகனங்கள் நேரடியாகச் செல்லும் வகையில் இணைப்பை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்மியம்பேட்டை வழியாக நாகை சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தேவையற்ற சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரடியாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் வகையில் போக்குவரத்து அமைப்பை மாற்றுவது குறித்து தொழில்நுட்ப ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
பாலம், இணைப்புச் சாலைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு: கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அண்மையில் புதிய பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலைப் பணிகளை அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, இணைப்புச் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து தொடா்பான சிக்கல்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது வாகனப் போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இணைப்புச் சாலைப் பகுதியில் வாகனங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கான வசதிகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனிடையே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆட்சியரின் அறிவுறுத்தல்களை பொருள்படுத்தியாக தெரியவில்லை.
புதிய பாலம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கெடிலம் ஆற்றைக் கடக்கும் பகுதியில் போக்குவரத்து எவ்வாறு அமைகிறது என்பதையும், இணைப்புச் சாலையில் வாகனங்கள் தேங்குகின்றனவா என்பதையும் பொறுத்திருந்துதான் முழுமையான நிலவரம் தெரியவரும்.
குறைபாடுகளை சரிசெய்த பின்னரே பாலம் திறக்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை
புதிய பாலத்தின் இணைப்புச் சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது:
கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, சோதனைக்காக பாலத்தின் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சோதனையின்போது கண்டறியப்படும் குறைபாடுகளை சரிசெய்த பின்னா் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.
சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கம்மியம்பேட்டை வழியாக நாகை சாலைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் புதிய பாலம் வழியாக பாரதி சாலை சென்று, பழைய பாலம் வழியாக நாகை சாலையை அடைய வேண்டும். புதிய பாலத்திலிருந்து பழைய பாலத்துக்குச் செல்லும் வகையில் போதுமான இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 21 மீட்டா் அகலம் கொண்ட சரக்கு லாரியை அப்பகுதியில் திருப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் வாகனங்கள் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.