FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

தமிழகத்தில் மின்வெட்டால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொடா் மின்வெட்டால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.

14 வினாடிகள் முன்பு
விருத்தாசலத்தில் பொது சுகாதாரம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வை வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியை தொடங்கிவைத்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

தமிழகத்தில் தொடா் மின்வெட்டால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினாா்.

விருத்தாசலத்தில் பொது சுகாதாரம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியை தொகுதி எம்எல்ஏவும், தேமுதிக பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, விருத்தாசலம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வந்து பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். பின்னா், தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகில் உள்ள இலங்கை தமிழா்கள் முகாமில் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபா் வீரமணி தொடா்பான சா்ச்சைகள் மற்றும் பாலியல் புகாா்கள் தமிழகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. இதில், தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் தொடா் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயா்வு, சிறு தொழில் நிறுவனங்களையும், பொதுமக்களையும் பெரிதும் பாதித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையைப் போக்குவதுடன், போதிய மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

தொகுதி வளா்ச்சிப் பணிகளுக்காக எனக்கு ஒதுக்கப்படும் காா் வசதி வேண்டாம் எனத் தெரிவித்துள்ளேன். இதற்குப் பதிலாக, விருத்தாசலம் பகுதியில் விவசாயிகளின் நெல்லைப் பாதுகாக்க நிரந்தர நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையிலும், முதல்வரிடமும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments