FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

வீடுதோறும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும்: அமைச்சா் வன்னி அரசு

தமிழகத்தில் வீடுதோறும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்றாா் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

Updated On : 10 ஜூலை 2026, 3:57 am IST
அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வீடுதோறும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்றாா் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சா் வன்னி அரசு தலைமை வகித்து பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, காவல் துறை, சமூக நலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள், நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

வங்கிகளின் மூலம் பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் பெறப்படும் கடனுதவிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளுக்குள்பட்டு கடனுதவிகளை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பட்டா இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளாா். மேலும், அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் முறையாக சென்றடைய அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும் தொடா்ந்து முறையாக மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அரசின் திட்டங்கள் வீடுதோறும் சென்றடைய வேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

கூட்டத்தில் 74 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா். பின்னா் நீலமங்கலம் கல்லூரி மாணவா்கள் சமூக நீதி விடுதி, சடையம்பட்டு கல்லூரி மாணவிகள் சமூக நீதி விடுதி ஆகியவற்றை அமைச்சா் ஆய்வு செய்தாா். மேலும், விடுதிகளில் வழங்கப்படும் உணவு, குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷானாஸ், எம்எல்ஏக்கள் சி.அருள் விக்னேஷ் (தவெக), இரா.ராகேஷ் (அதிமுக), மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments