FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புதுவை பல்கலை.யில் கருணாநிதிக்கு தமிழ் இருக்கை: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும்

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றும், புதுச்சேரியில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்றும் முதல்வர் வே.நாராயணசாமி அறிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கருணாநிதியின் மறைவையொட்டி, ஏற்கெனவே ஒரு நாள் அரசு விடுமுறை மற்றும் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் துக்கம் கடைப்பிடிப்பது ஆக.7-ஆம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை என 7 நாள்களாக நீட்டிப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இது புதுச்சேரி,  காரைக்கால்,  மாஹே,  ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மேற்கொள்ளப்படும். இந்த 7 நாள்களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படாது. கருணாநிதி தமிழ் மக்களுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். 
அவரைப் போற்றி, மதிக்கும் வகையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை (அமர்வு) ஏற்படுத்தப்படும். இந்த இருக்கை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் இருக்கும்.   இதற்குத் தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்கித் தரும்.
காரைக்காலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பட்ட மேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். காரைக்காலில் கோட்டுச்சேரியில் இருந்து திருநள்ளாறு வரை செல்லும் புறவழிச் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும். புதுச்சேரியில் ஒரு தெருவுக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும்.
அரசு சார்பில் அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு குழுவை அமைத்து, இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை நிறுவப்படும்.
கருணாநிதியின் மறைவு தமிழகம், புதுவைக்கு பேரிழப்பு. புதுவை அரசுக்கு கருணாநிதி பெரிய பங்காற்றியுள்ளார். புதுவை மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவியுள்ளார். 
தமிழகத்தில் முதல்வராக இருந்தபோது, புதுவை காங்கிரஸ் ஆட்சி கேட்ட திட்டங்களைக் கொடுத்தவர்.
தமிழர்கள் அனைவரும் விரும்பிய வகையில், கருணாநிதி உடலை அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments