புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகம் செய்ய ரூ.750 கோடி தேவை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கத்துக்கு தேவையான 250 ஏக்கர் நிலத்தை கையகம் செய்ய ரூ.750 கோடி தேவை என்று புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கத்துக்கு தேவையான 250 ஏக்கர் நிலத்தை கையகம் செய்ய ரூ.750 கோடி தேவை என்று புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நானும், முதல்வர் நாராயணசாமியும் மத்திய விமானத் துறை அமைச்சரை அண்மையில் சந்தித்துப் பேசினோம். அப்போது, புதுச்சேரியில் இருந்து நேரடியாக கொச்சி மற்றும் திருப்பதிக்கு புதிய விமான சேவை தொடங்க அனுமதி கோரினோம். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த 250 ஏக்கர் நிலம் தமிழகத்திடம் இருந்து தேவைப்படுகிறது. தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 கோடி வீதம் புதுச்சேரியில் விற்கப்படும் விலையை கேட்கிறது. அதன்படி 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ரூ.750 கோடி தேவைப்படுகிறது. புதுவை அரசிடம் நிதியில்லை. எனவே, ரூ.750 கோடியும் கொடுத்து விமான விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழகத்திடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
ஜிப்மர் சார்பில் சேதராப்பட்டில் உடலுறுப்பு மாற்று சிகிச்சையுடன் கூடிய உயர் சிகிச்சை மையம் ரூ.1,400 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதை விரைவுப்படுத்தும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது அவர், இந்தப் பணிக்கு முதல் கட்டமாக ரூ.564 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டதாகவும், அதனால் தொடக்கப் பணி 10 நாள்களில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே போல, ஜிப்மர் காரைக்கால் கிளையை விரைவுப்படுத்தவும் கேட்டுக் கொண்டோம். ஏனாமிலும் ஜிப்மர் கிளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் மாஹேயில் மாதம் ஒரு முறை ஜிப்மர் மருத்துவர்கள் குழு சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதுவையில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஜிப்மர் கிளை செயல்பாடு இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தின்படி நாடு முழுக்க மண்டல அளவில் ரூ.524 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. 800 ஏக்கரில் செயல்பட்டு வரும் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 100 ஏக்கரில் தென் மண்டல விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை வைத்தோம்.
இந்த கோரிக்கை குறித்து அவர் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். எனவே, புதுச்சேரியில் விளையாட்டு பல்கலைக்கழக கிளை அமைக்கப்படும்.
மத்திய மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் பூங்கா, நடைபாதை, மீன் பதப்படுத்தும் மையம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ரூ.140 கோடிக்கான திட்டத்தை கொடுத்துள்ளோம்.
அதனை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார் என்றார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.