FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சட்டப்படி ஆளுநர் மாளிகையே செயலகம்: முதல்வருக்கு ஆளுநர் கிரண்பேடி பதில்

சட்டப்படி ஆளுநர் மாளிகையே செயலகம் என முதல்வர் நாராயணசாமிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்தார்.

Updated On : 31 டிசம்பர் 2018, 8:36 am IST
பகிர்:

சட்டப்படி ஆளுநர் மாளிகையே செயலகம் என முதல்வர் நாராயணசாமிக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்தார்.
புதுவை ஆளுநர் மாளிகையை செயலகம் என அழைப்பது விதி மீறல் என்றும், ஆளுநர் மாளிகை தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் புதுவை முதல்வர் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். 
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆளுநர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை ஆளுநர் மாளிகையில் அரசு அதிகாரிகளுக்கான பணித் திறன்களை மேம்படுத்தும் தேர்வை நடத்தக் கூடாது என முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பது தவறான தகவல். புதுவை யூனியன் பிரதேச அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் தொடங்க கடந்த 2013 -ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 2016-இல் அந்த முடிவைச் செயல்படுத்த முயற்சி எடுத்த போது, பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், ஆளுநரின் செயலகம் அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு சட்ட விதிகள் தொடர்பான பயிற்சியளிக்க துறைகளின் செயலர்களுக்கு உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை அனைத்துத் துறை அதிகாரிகளும் செயல்படுத்தி வருகின்றனர். இதில், அடிப்படை பயிற்சி, அன்றாடச் செயல்பாடு, புத்தாக்கப் பயிற்சி என பல்வேறு வகைகளில் திறன்களை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்தப் பயிற்சி தொடர்பாக அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது, திருப்திகரமாக இருந்ததாக அவர்கள் பதிலளித்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 309, மத்திய உள்துறை அமைச்சகம் 11.1.1965-இல் வெளியிட்ட அறிவிக்கை, புதுச்சேரி அரசு அதிகாரிகளுக்கான நிர்வாக விதிகள் சட்டம் 1966 விதி எண் 4 ஆகியவற்றின்படி, அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கான பயிற்சியை அளிக்க ஆளுநருக்கே முழு அதிகாரம் உண்டு. 
இதேபோல, மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கிய 1963, புதுச்சேரி அரசின் அலுவல் விதிப்படி புதுவை துணைநிலை ஆளுநர் அலுவலகம் துறையாக (அ) அலுவலகமாக இல்லாமல் மாநில நிர்வாகியின் செயலகமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் முதல்வருக்கு உத்தரவு போடவும் அதிகாரம் உள்ளது. 
கடந்த 20.9.1963-இல் புதுவை ஆளுநர் செயலகம் மூலம்தான் புதுவை சட்டப்பேரவை உருவாக்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. எனவே, துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை விமர்சனம் செய்வதற்குப் பதிலாக,  மாநில அதிகாரிகள் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் உரிய கவனம் செலுத்த வேண்டும். 
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் முடக்கி வைத்திருப்பது, சட்டம் - ஒழுங்கைச் சரியாக  அமல்படுத்தாதது, பொதுத் துறை நிறுவனங்களில் நிலுவைத் தொகையை முறையாக வசூலிக்க முடியாதது உள்ளிட்ட பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாத பல சிக்கல்களில் முதல்வர் சிக்கியுள்ளார். இந்த பிரச்னைகளைத் திசைத் திருப்ப ஆளுநர் மாளிகையைத் தொடர்ந்து குறை கூறி வருகிறார் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments