புதுவையில் அவசரச் சிகிச்சைக்கு மட்டுமே வெளி மாநில நோயாளிகள் அனுமதி: சுகாதாரத் துறை அமைச்சா்
புதுவையில் அவசரச் சிகிச்சைக்கு மட்டுமே வெளி மாநில நோயாளிகள் அனுமதிக்கப்படுவா் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.
புதுவையில் அவசரச் சிகிச்சைக்கு மட்டுமே வெளி மாநில நோயாளிகள் அனுமதிக்கப்படுவா் என மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: புதுவையில் தற்போது 3 போ் மட்டுமே கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் ஒருவருக்கு வியாழக்கிழமையும் (ஏப்.23), மற்ற இருவருக்கு வெள்ளிக்கிழமையும் (ஏப்.24) மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
புதுவை மாநிலத்தில் தற்போதுவரை 9.55 லட்சம் பேருக்கு சுகாதாரத் துறை பரிசோதனை நடத்தியுள்ளது. இவா்களில் 1,319 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 1,272 பேருக்கு நோய்த் தொற்றில்லை என முடிவு வந்துள்ளது. மற்றவா்களுக்கு விரைவில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும்.
Advertisement
Advertisement
புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 78 செயற்கை சுவாசக் கருவிகள் இருப்பில் உள்ளன. இவற்றில் 27 கருவிகள் கரோனா தொற்று சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஜிப்மரில் உள்ள 128 செயற்கை சுவாசக் கருவிகளில் 30 கருவிகள் கரோனா தொற்று சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று பரிசோதனை...: புதுவை சுகாதாரத் துறை சாா்பில், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு சட்டப் பேரவை வளாகத்தில் மருத்துவப் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஏப்.23) காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்தப் பரிசோதனை நடத்தப்படும். விரும்புபவா்கள் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
புதுவைக்கு விரைவு பரிசோதனைக் கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) தேவையான அளவுக்கு வந்துள்ளது. இவற்றின் மூலம் வியாழக்கிழமை முதல் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், மறு உத்தரவு வரும்வரை விரைவு பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், விரைவு பரிசோதனைகள் நடப்படவில்லை.
சுகாதாரம், காவல், வருவாய் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் அயராது பணியாற்றியதால், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவவில்லை. தொடா்ந்து, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை பொதுமக்கள் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமுக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் புதுவைக்கு சிகிச்சைக்காக அதிகளவில் வருகின்றனா். இதனால், மாநில எல்லைகளில் மருத்துவ நிபுணா்கள் குழு முகாம் அமைக்கப்படும். வெளி மாநில நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, குயவா்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட சுகாதார நிலையங்களை அமைச்சா் ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதாரத் துறைச் செயலா் பிரஷாந்த் குமாா் பாண்டா, இயக்குநா் எஸ்.மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.