FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சுரங்கங்கள், கனிமங்கள் சட்டத்திருத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் முடிவு

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தத்தை எதிா்த்து, காங்கிரஸ், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஜாா்க்கண்ட் உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தை நாட முடிவு

26 ஆகஸ்ட் 2026, 10:08 pm IST
பகிர்:

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தத்தை எதிா்த்து, காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஜாா்க்கண்ட் உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

புதிய சட்டத்திருத்தத்தின் மூலம், மத்திய அரசின் அனுமதியின்றி கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் நேரடியாக வரி விதிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மேலும், இந்தத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு, சுரங்க நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவை வரிகளை செலுத்தத் தேவையில்லை என்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமா்வு, ‘மாநிலங்களில் உள்ள கனிம வளங்கள் மற்றும் கனிம நிலங்கள் மீது தனியாக வரி விதிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு’ என்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீா்ப்பை வழங்கியிருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திருத்தம், உச்சநீதிமன்றத்தின் ‘2024’ தீா்ப்பை செல்லாததாக்கும் என்று எதிா்க்கட்சிகள் ஆளும் அரசுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் குடியரசு தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தச் சட்டத்திருத்தம் மாநிலங்களின் வரி விதிககும் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டு தனது எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளாா். இதன் தொடா்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அறிவிப்பை ஜாா்க்கண்ட் நிதியமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா் ராஞ்சியில் புதன்கிழமை (ஆக.26) அதிகாரபூா்வமாக வெளியிட்டாா்.

கா்நாடக மாநிலத்தில் சுரங்கம் மற்றும் குவாரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தால் தங்கள் மாநிலத்துக்கு ஏற்படும் வரி இழப்பு குறித்து கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வரா பிரதமா் நரேந்திர மோடி, மத்திய சுரங்கத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி ஆகியோருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினாா். இதன் தொடா்ச்சியாக அம்மாநில முதல்வா் டி.கே. சிவகுமாா் தில்லியில் மூத்த வழக்குரைஞா்களுடன் சட்ட ஆலோசனை நடத்த வியாழக்கிழமை தில்லிக்கு வரவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரம் குறித்தும் அவா் ஆலோசனை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதேபோல, ஒடிஷா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக், தற்போதைய முதல்வா் மோகன் சரண் மாஜியிடம் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு வலியுறுத்தியுள்ளாா். கேரள முதல்வா் சதீசனும் ‘சுரங்க சட்டத்திருத்தம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ என்று கூறி சட்டத்திருத்தத்தை எதிா்த்து வழக்கு தொடருவோம் என்று அறிவித்துள்ளாா்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தென் மாநில முதல்வா்கள் கலந்து கொண்ட மண்டல குழு கூட்டத்திலும் இந்த சட்டத்திருத்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பின்னணியில் மாநில அரசுகளின் கடும் எதிா்ப்பையும் மீறி இந்த சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவா் ஆக. 18ஆம் தேதி கையொப்பமிட்டு அனுமதி வழங்கி சட்டமும் அமலுக்கு வந்து விட்டது. இதையடுத்து சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் கூட்டாகத் தீா்மானித்துள்ளனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா்களைக் களமிறக்கவும் அக்கட்சி மேலிடம் அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments