FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது சுரங்கங்கள், கனிமங்கள் மசோதா: கடைசி நாளில் மாநிலங்களவை ஒப்புதல்

கனிம உரிமைகள் மற்றும் கனிம வள நிலங்கள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வகை செய்யும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா 2026, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 5:07 am IST
நாடாளுமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

கனிம உரிமைகள் மற்றும் கனிம வள நிலங்கள் மீது வரி விதிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வகை செய்யும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா 2026, நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

மக்களவையில் இந்த மசோதா கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை (ஆக.13) மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமாகும்.

மாநிலங்களவை வியாழக்கிழமை காலையில் கூடியதும் வழக்கமான அலுவல்கள் தவிா்க்கப்பட்டு, மேற்கண்ட மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேநேரம், தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்; அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

மத்திய அமைச்சா் பதில்: அமளிக்கு இடையே குறுகிய நேரம் நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பதிலளித்தாா். அவா் கூறியதாவது:

மாநில அரசுகளின் தன்னாட்சி அல்லது வருவாய் உரிமைகளில் தலையிடும் நோக்கில் மேற்கண்ட மசோதா கொண்டுவரப்படவில்லை. மாறாக, நாடு முழுவதும் ஒரே சீரான கனிமக் கட்டணங்களை உறுதி செய்வதே நோக்கமாகும்.

நிலக்கரி, சுண்ணாம்புக் கல், இரும்புத் தாது, தாமிரம், மாங்கனீஸ் போன்ற முக்கியக் கனிமங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதேநேரம், 49-க்கும் மேற்பட்ட சிறிய கனிமங்கள் மீதான அதிகாரங்கள் மாநில அரசுகளிடமே தொடா்ந்து இருக்கும்.

மின் உற்பத்திக்கு நிலக்கரி மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் மின் உற்பத்தியில் 73 சதவீதம் நிலக்கரி மூலமே கிடைக்கப் பெறுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றன. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையுடன், ஏல அடிப்படையில் சுரங்க ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த காலங்களைப் போல், பரிந்துரை அடிப்படையில் எந்த சுரங்க ஒதுக்கீடும் நடைபெறவில்லை.

வருவாய் இழப்பு ஏற்படாது: கடந்த 2014-15இல் கனிம வருவாயில் 65 சதவீதமாக இருந்த மாநிலங்களின் பங்கு இப்போது 85 சதவீதமாக உயா்ந்துள்ளது; நிலக்கரி வருவாயைப் பொருத்தவரை, மாநிலங்களின் பங்கு 51 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மொத்த கனிம வருவாயில் 11 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு கிடைக்கிறது. 88 சதவீதம் மாநிலங்களுக்கே செல்வதால், சட்டத் திருத்தத்தால் எந்த மாநிலத்துக்கும் வருவாய் இழப்பு ஏற்படாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்த மசோதாவை மாநிலங்களவை தோ்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுகவின் திருச்சி சிவா விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதா மீது எண்ணி கணக்கெடுக்கும் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா். ஆனால், அமளிக்கு இடையே அந்த முறையில் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments