வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டுசெல்ல தமிழக அரசு தடை குறித்து...
வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டுசெல்ல தமிழக அரசு தடை விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
சரியான முடிவு
தற்போதைய சூழலில் தமிழகத்தில் கட்டுமானப் பணிகள் அதிகரித்துவரும் நிலையில், கனிமப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கனிமங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதால் உள்ளுர் சந்தையில் விலை அதிகரிக்கிறது. அதிகப்படியான கனிமவள பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், வெளிமாநில பகுதியிலிருந்து வரும் கனரக வாகனப் போக்குவரத்தால் உள்ளூர் சாலைகளும் பழுதடைகின்றன. எனவே, தமிழகத்திலிருந்து கனிமங்கள் வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு தடை செய்திருப்பது சரியானதே.
கே.ஆர். ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
Advertisement
Advertisement
வெற்றி கிடைக்குமா?
கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கடத்துவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கனிமவளக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்றால் கன்னியாகுமரி மாவட்டம் விரைவில் கடலுக்குள் மூழ்கி விடும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கனிமவளக் கடத்தலை செய்வது யார் என்பது அதைத் தடுத்து நிறுத்தக் கடமைப்பட்டவர்களுக்குத் தெரியும். தற்போது, அரசு இதற்குத் தடை விதித்தாலும் இதில் வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகமே.
கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.
கொள்கை வகுத்தல்
வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டுசெல்லும் விவகாரத்தில் முழுமையான தடையை விட, அறிவியல் அடிப்படையிலான அளவு நிர்ணயம் அவசியம். தமிழ்நாட்டின் தொழில் தேவைகள், குறிப்பாக எஃகு ஆலைகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல், இரும்புத் தாது உள்ளிட்ட மூலப் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் சமநிலையும் பூமியின் இயற்கை வளங்களும் பாதிக்கப்படக் கூடாது. மத்திய}மாநில அரசுகள் இணைந்து நிலையான கொள்கைகளை வகுத்தால் தொழில் வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஒருங்கிணைந்து நடைபெறும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
அனுமதிக்கலாம்
எந்த ஓர் இயற்கை வளமும் அனைவருக்கும் பொதுவானது என்பதே ஒட்டுமொத்த எண்ணமாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் நதிநீர் தங்களுக்கே உரிமையானது என்பதுபோல் முரண்டு பிடிக்கிறார்கள். ஆற்று மணல் உள்ளிட்ட கனிமங்கள் தங்கள் தேவைக்கு அவர்கள் மாநிலத்திலேயே இருந்தாலும், அவர்களது வளத்தைக் காக்கும் நோக்கில் பிற மாநிலங்களில் இருந்து அவற்றை வாங்கிக் கொள்வதில் கவனம் வைக்கிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் அரசு ஆராய்ந்து முறைப்படி அனுமதி பெற்று வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கலாம்.
திருப்பூர் சி. இரத்தினசாமி, பொல்லிக் காளிபாளையம்.
பாராட்டலாம்
தமிழக அரசு தற்போது கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தடை விதித்து நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைப் பாராட்டலாம். அண்டை மாநிலங்களின் இயற்கை வளங்களையும், உற்பத்திப் பொருள்களையும் ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் வேளாண் பொருள்களும், கனிம வளங்களும் அனுப்பப்படுகின்றன. அதேவேளை அவர்கள் மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லைப் பகுதிகளில் கொட்டுவது ஏற்றுக்கொள்ளமுடியாத செயலாகும்.
கலைப்பித்தன், கடலூர்.
ஆதரிக்கலாம்
தமிழ்நாடு வளமாக இருப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தடை உத்தரவை நாம் நிச்சயம் ஆதரிக்கலாம். சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் சென்று வெளிமாநிலங்களுக்கு விற்பது மிகவும் தவறான செயல். இதை யார் செய்கிறார்கள் என்று கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதை விட தடை விதிப்பதால் தவறு செய்பவர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவையான கனிமங்களை மட்டுமே வெட்டி எடுப்பர்.
உஷா முத்துராமன், மதுரை.
பரிகாரம்
கடந்த ஆண்டுகளில் கனிம வளம் என்பது திருட்டு என்பதைக் கடந்து கொள்ளை என்ற நிலைக்குச் சென்று விட்டதை உணர்ந்தும், இனி அந்த மாதிரி நிலை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாகவும், நதி நீர்ப்பாசனத்தில் சட்டப்படியான அணுகுமுறைக்குக் கூட ஒத்துழைக்காத அண்டை மாநிலத்துக்கு கனிமவளம் தடுக்கப்படுவதுகூட ஒருவித பரிகாரமாக அமையும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து தமிழக அரசின் முடிவாக எதிரொலித்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் கனிமவளக் கொள்ளை என்பதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்து தடை விதிப்பதற்கு தடை ஏது?
எஸ்.எல். ஜார்ஜ் அருண், சொக்கன் குடியிருப்பு.
ஒப்பந்தங்கள் தேவை
உபரி வளங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்து, தேவைப்படும் வளங்களை அவர்களிடம் இருந்து பெறும் வகையில் பரஸ்பர உறவுகள் இருக்க வேண்டும். தமிழக அரசு எதற்காக இத்தகைய தடையை விதித்துள்ளது என்ற காரணத்தை நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூறி பிறகு உரிய முறையில் இதற்குத் தீர்வு காண வேண்டும். இந்திய அரசு வெளிநாடுகளுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள்போல, நாட்டில் ஒற்றுமையை வளர்க்க இதுபோன்ற ஏற்றுமதி} இறக்குமதி ஒப்பந்தங்கள் நிச்சயம் தேவை. இதனால் எந்தப் பாதகமும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தே.ச. மங்கை, திருநெல்வேலி.
கண்காணிக்க வேண்டும்
வெளி மாநிலங்களுக்குத் தேவைப்படும் கனிமங்களை, நம் மாநிலத்தின் அனுமதியுடன் எடுத்துச் செல்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. அவ்வாறு எடுக்கப்படும் கனிமங்கள் நமக்கு பற்றாக்குறையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சில அரிய வகை மணல்களை டெண்டர் விடும்போது, அவை சரியான அளவில் எடுக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பாறைகளை வெட்டி எடுக்கும்போது, அவற்றை அந்த மாநிலங்களுக்கு எடுத்து சென்று, அங்கு வைத்து தூளாக்க வேண்டும். அதனால், நம் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதிக்காது.
எஸ். மோகன்,கோவில்பட்டி.
சூழலுக்குக் கேடு
குவாரிகளைக் குத்தகைக்கு எடுப்பவர்கள் அளவுக்கு அதிகமான கனிமங்களைச் சட்டபூர்வமாக அனுமதித்த அளவைவிட கூடுதலாக வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதனால், அரசுக்கு ஏற்படும் இழப்பு பல்லாயிரம் கோடி. மேலும், சமூகத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு உண்டாகிறது. பொறுப்பான அதிகாரிகளின் மேற்பார்வையில் கனிமங்கள் வெட்டி எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் விதிக்கப்பட்ட தமிழக அரசின் தற்காலிகதடை வரவேற்கப்பட வேண்டியதுதான்.
இரா. இரவிக்குமார், சென்னை.
விழிப்புணர்வு
ஓடுகள் வேய்ந்து கட்டப்படும் முறை மறைந்து, கான்கிரீட் தூண்கள், தளங்களுடனே கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கிராமங்களிலும் ஓட்டு வீட்டைக் காண்பது அரிதாக உள்ளது. இதனால், நவீன கருவிகளைக் கொண்டு தமிழ்நாட்டின் பல மலைகள், குன்றுகள் மரங்களுடன் தகர்க்கப்பட குவாரிகள் பெருகி விட்டன. கனிம வளம் மாநிலம் விட்டுச் செல்லக் கூடாது என்ற தடையால் நெடுஞ்சாலைப் பணிகள் பாதிக்கப்படும் என்ற கேரள முதல்வரின் கூற்று ஏற்புடையதல்ல. குவாரிகள் அனைத்தும் ஆறு மாதங்களானாலும் மூடபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆ.லியோன், மறைமலைநகர்.
நிரந்தரத் தடையல்ல
இது நிரந்தரத் தடையல்ல 3 மாதங்களுக்கான தற்காலிகத் தடை மட்டுமே. அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிய லாரிகளால் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சேதமடைந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால், தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களுக்கான தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். முறையற்ற சட்ட விரோத குவாரிகளின் செயல்பாட்டையும் கட்டுப்படுத்த முடியும்.
பா. சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
அவசரம் கூடாது
இந்த தற்காலிக தடைக்கான காரணம் கட்டுமானப் பொருள்களின் தட்டுப்பாட்டை தவிர்ப்பது; விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது; நடைமுறையில் இருக்கக்கூடிய ஏதேனும் ஒன்றைத் தடை விதிப்பதற்கு முன்பாக தேவையான அளவு நிதானித்து, அவசரப்படாமல், ஆய்ந்தறிந்து, நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவுக்கு சாத்தியமாகாத அளவுக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இதுதான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும் இருக்கிறது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
தமிழகமே பாழாகும்
ஒவ்வொரு மாநிலமும் தங்களது மலை, மணல் வளத்தைப் பாதுகாத்துக் கொள்ளும்போது, நமது மாநிலம் மட்டும் கனிம வளங்களை பிற மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலை நீடிக்குமானால் எதிர்காலத்தில் ஒரு துளிகூட மழை பெய்யாத நிலை ஏற்படலாம். கூடுதலாக இயற்கை சமன்பாடும் பாதிக்கப்படலாம். இந்தத் தடையை நிரந்தரமாக்க வேண்டும். இது அரசின் பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.
வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.