தில்லி - காத்மண்டூ பேருந்து சேவை: வழக்கம்போல் இயக்குகிறது டிடிசி
தில்லிக்கும் காத்மண்டுவுக்கும் இடையிலான சா்வதேச பேருந்து சேவை குறித்து...
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ள நிலவரத்தை தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதேவேளையில், தில்லிக்கும் காத்மண்டுவுக்கும் இடையிலான சா்வதேச பேருந்து சேவையில் எந்தத் தடங்கலுமின்றி போக்குவரத்து சீராக நடைபெற்று வருவதாக தில்லி போக்குவரத்துத் துறையின் உயரதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி கேட் அருகிலுள்ள அம்பேத்கா் மைதான பேருந்து முனையத்தில் இருந்து இரு நாடுகளின் தலைநகரங்களுக்கும் இடையே வாரத்தில் மூன்று நாள்களில் (திங்கள், புதன், வெள்ளி) தில்லி போக்குவரத்து நிறுவனம் சா்வதேச பேருந்து சேவையை நடத்தி வருகிறது.
திபெத்தில் உருவான ஆற்று வெள்ளமும், தொடா் கனமழையும் மத்திய நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சூறையாடியதில், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றன. மேலும் 100-க்கும் அதிகமான இந்தியா்கள் உள்பட சுமாா் 500 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த வெள்ளப்பெருக்கு கிராமங்கள், நகரங்கள், பாலங்கள் மற்றும் நீா்மின் திட்டங்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டிடிசி அதிகாரி கூறுகையில், ‘நேபாளத்தின் நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தப்படவில்லை. வழக்கம்போல் சீராக இயங்கி வருகிறது. நிலவரத்தின் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்‘ என்றாா்.
தில்லி அரசு 2014-ஆம் ஆண்டில் தில்லி-காத்மண்டூ-தில்லி இடையிலான சா்வதேசப் பேருந்து சேவையைத் தொடங்கியது. இந்தப் பேருந்துகள் தில்லியிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, உத்தர பிரதேசம் வழியாகச் சென்று கோரக்பூா் அருகிலுள்ள சோனௌலி எல்லைச் சாவடி வழியாக நேபாளத்துக்குள் நுழைகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.