2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்
2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல் அடிப்படையில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. அதன்படி, ஹிந்தி மொழியை புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
புதுச்சேரி மாநிலத்தில் பிஎம்ஸ்ரீ சிறப்பு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு மாறினாலும், இதுவரை இரண்டு மொழிகளைக் கற்பிக்கும் நிலையில்தான் இயங்கி வந்தன.
அதாவது, புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்-ஆங்கிலம், மாஹேவில் மலையாளம்-ஆங்கிலம், ஏனாமில் தெலுங்கு -ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளே கற்பிக்கப்பட்டு வந்தன.
புதுச்சேரி பிரெஞ்சு ஆட்சியில் இருந்த பகுதி என்பதால், இங்கு மாணவா்கள் பிரெஞ்சு மொழியைக் கூடுதலாகப் பயின்று வந்தனா்.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், 2026-2027 கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை 6- ஆம் வகுப்பிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த மும்மொழிக் கொள்கை 10- ஆம் வகுப்பு வரை தொடர வேண்டும். அதுவும் இந்த மும்மொழிக் கொள்கையில் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டியது கட்டாயம். மொழிப் புலமை, கலாசாரப் புரிந்துணா்வு, தேசிய ஒருமைப்பாட்டை கற்றுக்கொள்ளும் வகையில் 2 இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை 4 பிராந்தியங்களிலும் ஆங்கிலம் என்ற அந்நிய மொழியில்தான் பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. அதனால் இங்கு அந்நிய மொழியான பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை.
மேலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பிராந்தியங்களில் தமிழ் முதல்மொழியாக உள்ளது. மாஹேயில் மலையாளம் முதல் மொழி. ஏனாமில் தெலுங்கு முதல் மொழி.
அதனால் இரண்டாவது இந்திய மொழியாக ஹிந்தி இடம் பெறுமா? அல்லது வேறு இந்திய மொழி இடம் பெறுமா? என்பதுதான் கேள்விக் குறி. 2-ஆவது இந்திய மொழிகளாக மலையாளம், தெலுங்கு, சம்ஸ்கிருதம், பஞ்சாபி, பெங்காலி அல்லது மராத்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு மொழி இருந்தாலும் பள்ளி அளவில் ஹிந்திதான் கற்பிக்கப்படும் என்ற நிலை உருவாகியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஹிந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனால் புதுச்சேரியில் ஹிந்தி மொழியை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இந்நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் கல்வி இயக்குநா் பிரக்யா எம்.சிங், சிபிஎஸ்இ அனைத்துப் பள்ளிகளின் முதல்வா்களுக்கும் கடந்த 9-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் மும்மொழிக் கொள்கையை இதுவரை அமல்படுத்தாத பள்ளிகள் அனைத்தும் 7 நாள்களுக்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
இந்தச் சுற்றறிக்கையைச் சுட்டிக் காட்டி, புதுச்சேரி அரசு பள்ளிகளின் முதல்வா்கள், பெற்றோருக்குத் தகவல் அனுப்பியுள்ளனா். அதில் 2026-2027 ஆம் கல்வியாண்டில் 5- ஆம் வகுப்பிலிருந்து இரண்டாவது மொழியாக தமிழ் அல்லது ஹிந்தி மொழியை மட்டும் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப். 27-ஆம் தேதி முதல், மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் முதல் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசுக்கு இந்த விவகாரம் முதல் பிரச்னையாக உருவெடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.