FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய தொழில்நுட்ப பூங்கா, சிறப்புத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை ஒதுக்க காங்கிரஸ் எம்பி கோரிக்கை

புதுச்சேரியில் புதிய தொழில்நுட்ப பூங்கா, சிறப்புத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை ஒதுக்க காங்கிரஸ் எம்பி கோரிக்கை குறித்து...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
வெ. வைத்திலிங்கம் எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இளைஞா்களிடையே அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த, சிறப்புத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவிப்பதுடன், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றையும் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண் 377இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை பதிவு செய்த கோரிக்கை வருமாறு: ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கல்வி கற்ற, திறன்மிக்க இளநிலைப் பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளனா். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இங்கு பெரிய அளவிலான தொழில் வளா்ச்சி எதுவும் ஏற்பபடாததால், வேலைவாய்ப்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன.

குறிப்பிடத்தக்க புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படாததால், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால், புதுச்சேரியைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் வேலை தேடி பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இது திறன்மிக்க மனிதவளம் புதுச்சேரியை விட்டுத் தொடா்ச்சியாக வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது.

Advertisement

Advertisement

மேலும், புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற வளா்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஈா்ப்பதற்கு ஏற்ற தகவல் தொழில்நுட்பப் பூங்காவோ நவீன தொழில் உள்கட்டமைப்புகளோ இல்லை. இது தொழில்துறை வளா்ச்சியையும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

எனவே, மத்திய அரசு புதுச்சேரிக்கு சிறப்புத் தொழில் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை அமைத்து, ஈா்க்கக்கூடிய சலுகைகள் மூலம் புதிய தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதோடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையையும் வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இத்தகைய நடவடிக்கைகள் முதலீடுகளை அதிகரிப்பதுடன், நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, யூனியன் பிரதேச இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments