இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த நாள் விழா! கீழூரில் தேசிய கொடி ஏற்றி அமைச்சா்கள் மரியாதை!
பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த விழா சட்டபூா்வ பரிமாற்ற நாளாக கீழூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தியாகிகளைக் கௌரவித்தாா்.
பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்து வந்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை இந்தியாவுடன் இணைப்பது தொடா்பாக புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு வில்லியனூா் அருகே உள்ள கீழூா் கிராமத்தில் நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16- இல், புதுச்சேரி இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்பிறகு இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முறைப்படி ஏற்றது. இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற கீழூரில் புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக நினைவு தூண், நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டபூா்வ பரிமாற்ற நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். பின்னா் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
அங்குள்ள நினைவுத் தூணில் மலா் தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் இனிப்பு வழங்கினாா்.
இந்த விழாவில், அமைச்சா்கள் பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், ரவிக்குமாா், மோகன்தாஸ், ஐயப்பன், காா்த்திகேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.