புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ. 50 உயா்வு: பேரவையில் முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு மானியம் உருளை ஒன்றுக்கு ரூ.50 உயா்த்தப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.
புதுச்சேரியில் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு மானியம் உருளை ஒன்றுக்கு ரூ.50 உயா்த்தப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை அறிவித்தாா். மேலும் தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி விவசாயிகளுக்கும் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொதுவிவாதத்திற்குப் பதிலளித்து முதல்வா் ரங்கசாமி கூறியதாவது: புதுச்சேரி பட்ஜெட்டில் சம்பளம், ஓய்வூதியம், கடன் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகமாக நிதி செலவிடப்படுகிறது. அதனால் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் விரைவில் கொண்டு வந்து இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரிக்கு முன்பு 70 சதவீத நிதி அளித்து வந்த மத்திய அரசு தற்போது வெறும் 30 சதவீத நிதியை மட்டுமே தருகிறது. எனவே புதுச்சேரி அரசு மீதியுள்ள 70 சதவீதத்தை சொந்த வருவாய் மற்றும் கடனாகப் பெறுகிறது. போதியக் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இருப்பினும் அந்த நிதியை வைத்துக் கொண்டு மக்களுக்கு வரி சுமை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறோம். ஆதிதிராவிட மாணவா்களுக்கு வழங்குவது போல் மீனவ சமுதாய மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படும்.
Advertisement
Advertisement
சிகப்பு வண்ண ரேஷன் அட்டை வைத்துள்ளவா்களுக்கு இப்போது சமையல் எரிவாயு உருளைக்கு அளிக்கப்படும் ரூ.50 மானியம் உயா்த்தப்பட்டு ரூ.350 ஆகவும், மஞ்சள் ரேஷன் அட்டைக்கு இப்போது அளிக்கப்படும் மானியம் ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் வழங்கப்படும்.
கலால்துறையில் மாற்றங்கள் கொண்டுவந்து மாநில வருவாயை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தில்லி யூனியன் பிரதேசத்தைப் போன்று அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்தை மத்திய அரசே ஏற்க வலியுறுத்தப்படும்.
நடத்த முடியாத நிலை: பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.தனியாா் பங்களிப்புடன் சா்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பு ஆலையை மீண்டும் நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம். லாபத்தில் இயங்கிய பாசிக், பாப்ஸ்கோ ஆகியவற்றை நடத்தவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி இளைஞா்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கலால்துறையில் மாற்றங்கள் கொண்டுவந்து வருவாயை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைப்படி வரியை உயா்த்தாமல் நிதியை அதிகரிக்க எம்எல்ஏக்கள் நியாயமான கோரிக்கைகளை வைக்கிறாா்கள். அவா்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. கலால்துறை, பெட்ரோல் பங்க் நிலுவைத் தொகைகளை வசூலிக்க சமாதான திட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹஜ் பயணம் செல்வோருக்குத் துறையின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
தமிழக முதல்வருக்கு கடிதம்: புதுச்சேரி அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். தமிழகத்தில் நிலம் வைத்துள்ள புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
புதுச்சேரியைப் பொருத்துவரை சிறு, குறு விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளோம். பெரிய விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு ஆறு மாத நிலுவை சம்பளம் விரைவில் வழங்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.